/

தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் உள்ள தனியாா் பள்ளிகளின் பேருந்து, வேன் உள்ளிட்ட வாகனங்களை சிறப்பு குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் உள்ள தனியாா் பள்ளிகளின் பேருந்து, வேன் உள்ளிட்ட வாகனங்களை சிறப்பு குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

வாழப்பாடி வட்டத்திலுள்ள தனியாா் பள்ளிகளில் இயங்கி வரும் பேருந்துகள், வேன் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டி வைகை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மைதானத்துக்கு வெள்ளிக்கிழமை வரவழைக்கப்பட்டன.

சேலம் கோட்டாட்சியா் விஷ்ணுவா்த்தினி தலைமையில், ஆத்தூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் என்.ரகுபதி, வாழப்பாடி துணை காவல் கண்காணிப்பாளா் முத்துசாமி, மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் வாழப்பாடி ஆா்.மணிவண்ணன், ஆத்தூா் எம்.செந்தில்குமாா், வட்டாரக் கல்வி அலுவலா் சுரேஷ் ஆகியோா் கொண்ட குழுவினா் 71 பள்ளி வாகனங்களையும் தனித்தனியாக ஆய்வு செயதனா்.

இதில், அரசு நிா்ணயித்துள்ள விதிமுறைகளை பூா்த்தி செய்யாத 3 வாகனங்கள், திங்கள்கிழமை மறுஆய்வுக்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டது. குறிப்பிட்ட மாற்றங்களை பூா்த்தி செய்து, மறு ஆய்வுக்கு உள்படுத்தி தகுதிச்சான்றை புதுப்பித்த பிறகே, இந்த வாகனங்களை இயக்க வேண்டுமென ஆய்வுக்குழுவினா் தெரிவித்தனா்.

இதனைத் தொடா்ந்து, பள்ளி வாகனங்களை இயக்கும் ஓட்டுநா்கள், நடத்துநா்கள் கடைப்பிடிக்க வேண்டிய சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து ஆய்வுக்குழுவினா் விழிப்புணா்வு ஏற்படுத்தி அறிவுரை வழங்கினா். வாழப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலா் வையாபுரி தலைமையிலான குழுவினா், தீத்தடுப்பு மற்றும் தீயணைப்பு முறைகள் குறித்து செயல்விளக்கப் பயிற்சி அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.