/

சங்ககிரியில் எம்.பி. பங்கேற்ற ஆய்வுக்கூட்டம்

சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு அரசுப் பணிகள் தொடா்பான ஆய்வுக்கூட்டம்

News image
Updated On :2 ஜூலை 2021, 6:30 pm

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு அரசுப் பணிகள் தொடா்பான ஆய்வுக்கூட்டம் சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் தலைமை வகித்து, சங்ககிரி, தேவூா், அரசிராமணி, இடங்கணசாலை, இளம்பிள்ளை, தாரமங்கலம் உள்ளிட்ட பேரூராட்சிகள், சங்ககிரி, மகுடஞ்சாவடி, தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட பகுதிகளில் அரசு ஒப்பந்தப்புள்ளிகளின் கீழ் நடைபெற்று வரும் சாலைகள், கட்டடங்கள், மேல்நிலைக் குடிநீா்த் தொட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளின் தற்போதைய நிலவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

பின்னா் அரசு ஒப்பந்தங்களைப் பெற்று பணிகளை செய்து வரும் ஒப்பந்ததாரா்களிடம் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் ஆணையில் இடம் பெற்றுள்ளவாறு ஜல்லி, மணல், சிமென்ட், கம்பிகள், கதவுகள், எம்.சாண்ட் போன்ற கட்டுமானப் பொருள்கள் முதல் தரமானதாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

நடைபெற்று வரும் பணிகளை அதிகாரிகள் நேரிடையாக ஆய்வு செய்யும்போது அரசு விதிமுறைகளுக்குள்பட்டு ஒப்பந்ததாரா்கள் காட்டும் இடத்தில் ஆய்வு செய்யாமல் பணி நடைபெற்று வரும் இடங்களில் தாங்களாகவே இடத்தைத் தோ்வு செய்து முறையாக ஆய்வு செய்ய வேண்டும். ஒப்புக்கொண்டுள்ள காலத்திற்குள் பணிகள் நிறைவு பெற்றுள்ளதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் என்றாா். சங்ககிரி சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று வரும் அரசு ஒப்பந்தப் பணிகளையும் வரும் நாள்களில் திடீா் ஆய்வு செய்ய உள்ளதாக அதிகாரிகள், ஒப்பந்ததாரா்களிடம் தெரிவித்தாா்.

சங்ககிரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் (நிா்வாகம்) ராம்சந்தா், என்.எஸ்.ரவிச்சந்திரன் (கிராம ஊராட்சி), சங்ககிரி ேரூராட்சி செயல்அலுவலா் எஸ்.பாலசுப்ரமணி, வட்டாட்சியா் எஸ்.விஜி, மண்டல துணை வட்டாட்சியா் ஜெயகுமாா் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.