கெங்கவல்லி ஒன்றிய அளவில் கரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டியில் தேர்வான முதல் மூன்று மாணவ, மாணவியர்க்கு சான்றிதழ் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
கெங்கவல்லி ஒன்றிய அளவில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டத்தின்கீழ் கெங்கவல்லி ஒன்றியத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கரோனா குறித்த விழிப்புணர்வு ஓவியப்போட்டி அவரவர்களது வீடுகளிலேயே வரைந்து, அந்த படைப்புகளை பள்ளி தலைமையாசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
ஒவ்வொரு பள்ளிகளிலும் முதல் மூன்று படைப்புகளை தலைமையாசிரியர்கள் தேர்வு செய்துகெங்கவல்லி வட்டார வள மையத்தில் ஒப்படைத்தனர்.
அதில் வந்த ஓவியங்களில் முதல் மூன்று படைப்புகள் கல்வி அலுவலர்கள் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டன.
அதில் தம்மம்பட்டி மெயின் நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி கௌசல்யா முதலிடத்தையும், 2-ம் இடத்தை தண்ணீர்த்தொட்டி பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவி மேனகாவும், 3-ம் இடத்தை 74.கிருஷ்ணாபுரம் நடுநிலைப்பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவி ஜோதிகாவும் பிடித்தனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மூன்று மாணவிகளுக்கும் சான்றிதழ், பதக்கம், வெற்றிக்கோப்பைகளை வட்டாரக்கல்வி அலுவலர் அந்தோணிமுத்து மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர்(பொ)சுஜாதா ஆகியோர் வியாழக்கிழமையன்று கெங்கவல்லி வட்டார வள மைய அலுவலகத்தில் வழங்கி பாராட்டினார்கள்.
இந்நிகழ்வில் தலைமையாசிரியர்கள் அன்பழகன், பொன்னி, அறிவியல் ஆசிரியர் ராஜசேகர், வட்டார ஆசிரியப் பயிற்றுநர்கள் பாலமுருகன், சுப்ரமணியன், செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.