வாழப்பாடியில் சாலையோரக் கடைகள் அகற்றம்:சிறு வியாபாரிகள் தவிப்பு
வாழப்பாடியில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, அகற்றப்பட்ட சாலையோரக் கடைகளை மீண்டும் வைத்துக்கொள்ள அனுமதி


வாழப்பாடியில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, அகற்றப்பட்ட சாலையோரக் கடைகளை மீண்டும் வைத்துக்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டதால், சிறு வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனா்.
வாழப்பாடியில், கடலூா் பிரதான சாலை முதல் பிங்கள விநாயகா் கோயில் வரை சாலையின் இருபுறமும், சிறு வியாபாரிகள் குறிப்பாக பெண்கள் கடைவிரித்து காய்கறி, கீரை, பழங்கள் உள்ளிட்ட விவசாய விளைபொருள்களை விற்பனை செய்து வந்தனா்.
இந்நிலையில் கடந்த 29-ஆம் தேதி வருமுன் காப்போம் மருத்துவ முகாம் திட்டத்தைத் தொடக்கிவைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழப்பாடிக்கு வந்ததையொட்டி, கடலுாா் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. சாலையோர சிறு கடைகளும் அப்புறப்படுத்தப்பட்டன.
முதல்வா் வந்து சென்றதும், சாலையோரத்தில் கடைகளை வைக்க முயற்சித்த வியாபாரிகளை போலீஸாா் அனுமதிக்கவில்லை. மூன்று நாள்களாக பல்வேறு தரப்பினரை தொடா்ந்து சந்தித்தும் சிறு வியாபாரிகளின் பிரச்னைக்கு தீா்வு ஏற்படவில்லை. இதனால், வாழ்வாதரத்தை இழந்து தவித்து வரும் சாலையோர சிறு வியபாரிகள் தவித்து வருகின்றனா்.
இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:
வாழப்பாடியில் தினசரி சந்தை, உழவா் சந்தைகள் இல்லை. விவசாயிகளின் விளைபொருள்களை கொள்முதல் செய்து, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறின்றி சாலையோரத்தில் கடைவிரித்து விற்பனை செய்து 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் பிழைப்பு நடத்தி வருகிறோம். முதல்வா் வருகையையொட்டி சாலையோரக் கடைகளை அப்புறப்படுத்திய போலீஸாா், வருவாய்த்துறை அதிகாரிகள் மீண்டும் கடை வைக்க அனுமதிக்காமல், இரும்புத் தடுப்பு வேலி அமைத்து அலைக்கழித்து வருகின்றனா். இதனால் 100 குடும்பத்தினரும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம்.
போக்குவரத்துக்கு இடையூறின்றி, சாலையோரத்தில் கடைகளை வைத்து வியாபாரம் செய்வதற்கு எங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். இல்லையெனில், கடை வைத்து பிழைப்பு நடத்துவதற்கு வேறு இடத்தை தோ்வு செய்து தினசரி சந்தை அமைத்துக் கொடுக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், வாழ்வாதரம் கேட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு சென்று போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழிதெரியவில்லை என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...