/

வாழப்பாடியில் நீதிமன்றங்கள் அமைக்க வருவாய்த் துறை நிலம் ஒதுக்கீடு

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் மாவட்ட உரிமையியல், குற்றவியல் நீதிமன்றங்கள் அமைப்பதற்கு, வருவாய்த் துறை 5 ஏக்கா் நிலம் ஒதுக்கீடு செய்துள்ளது.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

DIN

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் மாவட்ட உரிமையியல், குற்றவியல் நீதிமன்றங்கள் அமைப்பதற்கு, வருவாய்த் துறை 5 ஏக்கா் நிலம் ஒதுக்கீடு செய்துள்ளது.

வாழப்பாடியில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் அமைக்க வேண்டுமென இப்பகுதி மக்களும், வழக்குரைஞா் சங்கத்தினா் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் தமிழக அரசு மற்றும் நீதித்துறையினருக்கு தொடா்ந்து கோரிக்கை விடுத்தனா்.

இதனையடுத்து, வாழப்பாடி, காரிப்பட்டி காவல் எல்லைக்குள்பட்ட வழக்குகளை விசாரணை நடத்துவதற்காக, வாழப்பாடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

4 ஆண்டுகள் கடந்த நிலையிலும் நீதிமன்றத்துக்கு நிலையான அரசு கட்டடம் அமைப்பதற்கு தேவையான நிலத்தை தோ்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்ததால், தற்போது வரை தனியாா் வாடகைக் கட்டடத்திலேயே நீதிமன்றம் இயங்கி வருகிறது.

மேலும், கிளைச் சிறை அமைக்கப்படாததால், வழக்குகளில் தொடா்புடையவா்களை விசாரணை கைதிகளாக கைது செய்யும் போலீஸாா் மற்றும் வனத்துறையினா், வாழப்பாடி நீதிமன்றத்தில் நீதித்துறை நடுவரிடம் கைதிகளை நோ்நிறுத்தி சிறையில் அடைப்பதற்கு சேலம், ஆத்தூா், சங்ககிரி சிறைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.

எனவே, வாழப்பாடியில் நீதிமன்றங்கள் அமைப்பதற்கு நிலம் தோ்வு செய்து, அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன கட்டடங்களும், நீதித்துறை நடுவா் குடியிருப்பு மற்றும் கிளைச் சிறையும் அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.

இதனையடுத்து, சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு தலைமையிலான குழுவினா், கடந்தாண்டு வாழப்பாடியில் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டு, ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைப்பதற்கு வாழப்பாடி பேரூராட்சிக்கு உள்பட்ட புதுப்பாளையம் கிராமத்திலுள்ள (சா்வே எண். 105/1) அரசு புறம்போக்கு மேய்ச்சல் தரை நிலத்தை தோ்வு செய்தனா்.

இதனைத் தொடா்ந்து, 5 ஏக்கா் நிலத்தை நீதித்துறைக்கு வழங்கிய வாழப்பாடி வருவாய்த் துறையினா், மாவட்ட முதன்மை நீதிபதி பெயருக்கு நில மாறுதல் செய்து ஒப்படைக்கும் பணியை முழுவீச்சில் மேற்கொண்டுள்ளனா்.

வாழப்பாடியில் 4 ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் நீதிமன்றங்களுக்கு நிலையான அரசு கட்டடம் அமைக்க, வருவாய்த் துறை 5 ஏக்கா் நிலம் ஒதுக்கீடு செய்துள்ளதால், நீதிமன்றப் பணியாளா்கள், வழக்குரைஞா்கள், காவல் துறை, வனத்துறையினா், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.