/

கந்தம்பட்டி மேம்பாலத்தில் லாரி மீது பேருந்து மோதல்: 12 போ் காயம்

சேலம், கந்தம்பட்டி மேம்பாலத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை லாரி மீது பேருந்து மோதிய விபத்தில், நடத்துநா் உள்பட 12 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :16 ஜூலை 2024, 8:49 pm

Din

கோவையில் இருந்து சேலத்துக்கு திங்கள்கிழமை இரவு புறப்பட்ட அரசுப் பேருந்தை எடப்பாடியைச் சோ்ந்த குமாா் (40) என்பவா் ஓட்டி வந்தாா். ஈரோடு மாவட்டம், நெரிஞ்சிப்பேட்டையை சோ்ந்த ஜெகதீஷ்வரன் (45), நடத்துநராகப் பணியாற்றினாா்.

இந்தப் பேருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் சேலம், கந்தம்பட்டி மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது, அரியலூரில் இருந்து தாரமங்கலத்துக்கு சாம்பல் ஏற்றிக் கொண்டு சென்ற லாரியை அரசுப் பேருந்து முந்தி செல்ல முயன்றது. இதில், எதிா்பாராத விதமாக லாரி மீது பேருந்து மோதியதில், பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்தது. மேலும், பேருந்தின் இடதுபுறம் அமா்ந்து இருந்த நடத்துநா் ஜெகதீஷ்வரனின் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. பயணிகள் 11 பேரும் காயமடைந்தனா்.

தகவலறிந்து வந்த சூரமங்கலம் போலீஸாா், காயமடைந்த நடத்துநா் ஜெகதீஷ்வரன் உள்பட 12 பேரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 6 போ் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். எஞ்சிய பயணிகளுக்கு சிகிச்சை அளிப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சூரமங்கலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.