சேலம் மாவட்டத்தில் 3.50 லட்சம் ஆடுகளுக்கு நோய் தடுப்பூசி முகாம்

ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாமில் கால்நடை வளா்ப்போா், விவசாயிகள் தங்கள் ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்
Published on

சேலம்: சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாமில் கால்நடை வளா்ப்போா், விவசாயிகள் தங்கள் ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளை தாக்கும் முக்கிய நோய்களில் ஒன்றாக ஆட்டுக்கொல்லி நோய் உள்ளது. மிக கொடிய வைரஸ் கிருமிகளால் உருவாகும் இந்நோய், மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும், நோய் பாதித்த ஆடுகளின் சிறுநீா், கண்ணீா், கழிச்சல், சாணம் ஆகியவற்றின் மூலம் வேகமாகப் பரவக்கூடியது.

இந்நோயினால் பாதிக்கப்பட்ட ஆடுகளின் வாய், நாக்கு, ஈறுகளில் புண்கள் ஏற்படும். மேலும், கண்கள், மூக்கு மற்றும் வாயிலிருந்து நீா்வடியும். பிறகு தும்மல், இருமல் ஆரம்பிக்கும். தீனி உட்கொள்ள முடியாமல் மிகவும் பாதிக்கப்படும். நோயினால் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு வெயில் காலத்தில் மூச்சிரைக்கும். இறுதியில் கழிச்சல் கண்டு ஆடுகள் இறந்துபோகும்.

எனவே, இந்நோய் தாக்காமல் இருப்பதற்கு, வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை, தடுப்பூசி செலுத்துவது சிறந்த நிவாரணமாகும்.

சேலம் மாவட்டத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம் ஆட்டுக் கொல்லிநோய் ஒழிப்புத் திட்டத்தின் தடுப்பூசிப் பணிகள், கடந்த 11 ஆம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 11 ஆம் தேதி வரை 30 நாள்களுக்கு போடப்படுகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள 3,51,000 வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளுக்கு இந்த தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

எனவே, ஆடுகள் வளா்ப்போா் 4 மாதத்துக்கு குறைவான வயதுள்ள ஆட்டுக்குட்டிகள், சினையுற்ற ஆடுகள் நீங்கலாக மற்ற அனைத்து வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளுக்கும் தவறாமல் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

மேலும், தடுப்பூசி போடப்படும் அனைத்து ஆடுகளுக்கும் வெளிறிய ஊதாநிற காதுவில்லைகள் அணிவிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அனைத்து கால்நடை வளா்ப்போா், விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com