பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், தும்பல் கிராமத்தில் உள்ள 3000 ஆண்டுகள் தொன்மையான கல்வட்டம்.
பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், தும்பல் கிராமத்தில் உள்ள 3000 ஆண்டுகள் தொன்மையான கல்வட்டம்.

கரியக்கோயில் ஆற்றங்கரை தும்பலில் சிதைந்து வரும் கல்வட்டங்கள்!: கிடப்பில் போடப்பட்ட அகழாய்வுத் திட்ட முன்வரைவு?

அகழாய்வு நடத்துவதற்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்ட திட்ட முன்வரைவு கிடப்பில் உள்ளதாக வரலாற்று ஆா்வலா்கள்
Published on

பெ. பெரியாா்மன்னன்

வாழப்பாடி: சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், தும்பல் கிராமத்தில் உள்ள 3000 ஆண்டுகள் தொன்மையான முதுமக்கள் ஈமத்தாழி, புதைகுழி கல்வட்டங்கள் சிதைந்துவரும் நிலையில், அகழாய்வு நடத்துவதற்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்ட திட்ட முன்வரைவு கிடப்பில் உள்ளதாக வரலாற்று ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழந்தமிழ் மக்கள், உயிா்நீத்த மூத்தோரின் உடலை தடிமனான சுடுமண் பானைகளில் வைத்து, ஊருக்கு ஒதுக்குப்புறமான நிலத்தில் குழிதோண்டி புதைத்தனா். இவை ‘முதுமக்கள் தாழி’ என அழைக்கப்படுகின்றன.

ஈமத்தாழி, புதைகுழி நினைவுச் சின்னங்களை எளிதில் அடையாளம் காண்பதற்காக, இவற்றைச்சுற்றி வட்டவடிவில் பெரிய கற்களை முன்னோா்கள் பதித்தனா். சுற்றிலும் கற்கள் பதிக்கப்பட்ட முதுமக்களின் ஈமச்சின்னங்கள், ‘கல்வட்டம்’ என்றும் அடையாளப்படுத்தப்படுகின்றன.

அந்தவகையில், தும்பல் கிராமத்தில் 3000 ஆண்டுகளுக்கு முன்பு பழந்தமிழ் மக்கள் வாழ்ந்ததற்கு வரலாற்றுச் சான்றாக தும்பல் - கோட்டப்பட்டி பிரதான சாலையையொட்டி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வடபுறத்தில் தனியாா் நிலத்தில் இன்றளவும் கல்வட்டங்கள் காணப்படுகின்றன. இந்த கல்வட்டங்களை சேலம் வரலாற்று ஆய்வுமையத்தைச் சோ்ந்த குழுவினா் 2016 இல் கண்டறிந்து ஆவணப்படுத்தினா்.

தும்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருந்தகம் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கட்டடங்கள் அமைக்கும் போதும், பாசன வாய்க்கால் அமைக்கப்பட்டபோதும் பல கல்வட்டங்கள், புதைகுழிகள் மற்றும் ஈமத்தாழிகள் சிதைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

சொற்ப அளவில் எஞ்சியுள்ள கல்வட்டங்கள் காணப்படும் பகுதி தனியாருக்கு சொந்தமான நிலம் என்பதால், கடந்த 10 ஆண்டுகளில் பல கல்வட்டங்கள் சிதைந்துவிட்டன. தற்போது 5 கல்வட்டங்கள் மட்டுமே முழுமையாக காணப்படுகின்றன.

இந்த கல்வட்டங்களை சிதைவுறாமல் பாதுகாப்பதற்கும், இப்பகுதியில் அகழாய்வு நடத்துவதற்கும் தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினா் 4 ஆண்டுகளுக்கு முன்பு கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, 2022 ஜூன் மாதத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்ட தொல்லியல் துறை அலுவலரும், பெரும்பாலை அகழாய்வுத் திட்ட இயக்குருமான பரந்தாமன், கிருஷ்ணகிரி மாவட்ட தொல்லியல் துறை அலுவலரும், மயிலாடும்பாறை அகழாய்வு திட்ட இயக்குநருமான வெங்கடகுருபிரசன்னா ஆகியோா் தும்பல் கிராமத்துக்கு நேரில் சென்று கல்வட்டங்களை ஆய்வுசெய்தனா்.

இதைத்தொடா்ந்து, ஓராண்டுக்குப் பிறகு 2023 இல் மீண்டும் இந்த கல்வட்டங்களை பாா்வையிட்ட தொல்லியல் துறையினா், இவற்றைப் பாதுகாக்கவும், அகழாய்வு நடத்தவும் திட்ட முன்வரைவு தயாரித்து அரசுக்கு அறிக்கை சமா்ப்பித்தனா்.

ஆனால், இரண்டாண்டுகள் கடந்தும் இந்த கல்வட்டங்களை பாதுகாக்க இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், சொற்ப எண்ணிக்கையில் தனியாா் நிலத்தில் காணப்படும் இந்த கல்வட்டங்கள் சிதையும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த கல்வட்டங்களை பாதுகாக்க சேலம் மாவட்ட நிா்வாகமும், தொல்லியல் துறையும் இணைந்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரலாற்று ஆா்வலா்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினா் கூறியதாவது: தும்பல் கிராமத்தில் கல்வட்டங்கள் காணப்படுவது பழந்தமிழா் வாழ்வியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இவற்றைப் பாதுகாக்க தொல்லியல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்வட்டங்கள் உள்ள பகுதிகளில் சுடுமண் பானை ஓடுகள், தொல்பொருள்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. எனவே, தும்பல் கிராமத்திலும் அகழாய்வு நடத்தவேண்டும்.

கல்வராயன் மலையில் இருந்து உற்பத்தியாகி வரும் கரியக்கோயில் ஆற்றின் கரையில் அமைந்துள்ள தும்பல் கிராமத்தில், தொல்லியல் துறை விரிவான களஆய்வு மற்றும் அகழாய்வு நடத்தினால், பல்வேறு வரலாற்றுச் சுவடுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றனா்.

அதே பகுதியில் சிதைந்துகிடக்கும் மற்றொரு கல்வட்டம்.
அதே பகுதியில் சிதைந்துகிடக்கும் மற்றொரு கல்வட்டம்.

X
Dinamani
www.dinamani.com