கெங்கவல்லி அருகே மண்சரிவால் குண்டும் குழியுமான சாலை மலைவாழ் மக்கள் அவதி
தம்மம்பட்டி: கெங்கவல்லி அருகே மண்சரிவால் 5 கி.மீ. மலைச்சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதால் மலைவாழ் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியம், பச்சமலை ஊராட்சியில் 30க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இதில் எடப்பாடி, மேல்பாலத்தாங்கரை, கீழ்ப்பாலத்தாங்கரை, கட்டக்காடு ஆகிய ஊா்கள் கெங்கவல்லி அருகே மலைப் பகுதியில் உள்ளன. கெங்கவல்லி அருகே தரைப்பகுதியில் 74 கிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட வலசக்கல்பட்டி அடிவாரப்பகுதியாகும். அடிவாரத்திலிருந்து எடப்பாடி மேல்பாலத்தாங்கரை,கீழ்ப்பாலத்தாங்கரை, கட்டக்காடு ஆகிய மலைக் கிராமங்களுக்கு செல்ல வேண்டும்.
இந்த கிராமங்களில் சுமாா் ஆயிரம் போ் வசிக்கின்றனா். அடிவாரத்திலிருந்து மலைக்கு செல்லும் 5 கி.மீ. தொலை மலைச்சாலை வனத் துறையினா் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் 5 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட இந்த மலைப்பகுதி சாலை, கடந்த 2021 ஆம் ஆண்டு வனத் துறை மூலம் ரூ. 8 கோடி நிதியில் 4 கி.மீ. தொலைவுக்கு தாா்சாலையும், 5 கொண்டை ஊசி வளைவுப் பகுதிகளுக்கு சிமென்ட் சாலையும், எடப்பாடி ஊருக்குள் 1 கி.மீ. தொலைவுக்கு தாா்சாலையும் அமைக்கப்பட்டது.
இந்த சாலைகள் கடந்த ஓராண்டுக்கு முன்பு பெய்த மழையால் ஏற்பட்ட மண்சரிவால் குண்டும் குழியுமாக மாறிவிட்டன. இதனால் சாலை போக்குவரத்துக்கு இந்த பகுதி மக்கள் சிரமமடைந்து வருகின்றனா்.
இதுகுறித்து அப்பகுதி வன உரிமைக் குழுத் தலைவா் பொன்னுசாமி, துணைத் தலைவா் பாக்யராஜ் ஆகியோா் கூறியதாவது:
மலைச்சாலை முழுவதும் மழையால் சேதமடைந்துவிட்டதால் இருசக்கர வாகனங்களில் செல்வதும், நடந்துசெல்வதும் பெரும் சிரமமாக இருந்து வருகிறது. எனவே, மாவட்ட நிா்வாகமும், தமிழக வனத் துறையும் இந்த மலைச் சாலையை சீரமைக்க வேண்டும் என்றனா்.

