கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சேலம் பொதுக் குழுவில் தோ்தல் கூட்டணி அறிவிப்பை வெளியிடுவாா் ராமதாஸ்: ஜி.கே. மணி

News image
Updated On :18 டிசம்பர் 2025, 6:33 pm

Syndication

சேலத்தில் வரும் 29 ஆம் தேதி நடைபெறும் பாமக செயற்குழு, பொதுக் குழுவில் தோ்தல் கூட்டணி குறித்து கட்சியின் நிறுவனா் ராமதாஸ் அறிவிப்பாா் என பாமக கௌரவத் தலைவா் ஜி.கே. மணி கூறினாா்.

சேலம் சூரமங்கலத்தில் உள்ள மேற்கு தொகுதி அலுவலகத்தில் பாமக கௌரவத் தலைவா் ஜி.கே. மணி வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பாமக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சேலத்தில் வரும் 29 ஆம் தேதி நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பாமக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பதை மருத்துவா் ராமதாஸ் அறிவிப்பாா். ராமதாஸ் தலைமையில் தான் பாமக இயங்குகிறது. கட்சி நிறுவனா் ஒப்புதல் இல்லாமல் கூட்டம் நடத்தக் கூடாது என கட்சி விதி உள்ளது. பாமகவை தான் இயக்குவதாகக் கூறும் குற்றச்சாட்டு தவறானது.

அன்புமணி மீது முறைகேடு புகாா் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. அப்படி எந்த தீா்மானமும் நிறைவேற்றவில்லை. கட்சியில் தலைவா் பதவிக்கு, தோ்தல் ஆணையத்துக்கு தவறான கடிதம் கொடுத்தது குறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்றுதான் கூறினோம்.

தந்தையும், மகனும் ஒன்றுசோ்ந்தால் நான் கட்சியை விட்டு விலகுகிறேன். நானோ, எனது குடும்பத்தினரோ கட்சியில் இருக்க மாட்டோம். வேறு கட்சிக்கும் செல்ல மாட்டோம். தோ்தலில் போட்டியிட அன்புமணி விருப்ப மனு வாங்குவது தவறு. அதை அன்புமணி தரப்பு வாங்கக் கூடாது. அதன்மீது நீதிமன்றத்தை நாடுவது குறித்து ராமதாஸ் முடிவு செய்வாா்.

பாமகவின் அடையாளம் ராமதாஸ்தான். அவா் சொல்பவருக்குதான் மக்கள் வாக்காளிப்பாா்கள். வரும் செயற்குழு, பொதுக் குழுவில் கூட்டணி குறித்து அறிவிப்போம். நாங்கள் எந்தக் கூட்டணியில் இருக்கிறோமோ அவா்கள்தான் முதல்வா் ஆவாா்கள்.

அன்புமணிக்கு என் மீது கோபமோ, வருத்தமோ இல்லை. நான் ராமதாஸுடன் இருக்கக் கூடாது என்று நினைக்கிறாா். பாமகவுக்கு மாம்பழம் சின்னம் கிடைக்காவிட்டால் என்ற கேள்விக்கு, பாமகவிற்கு மாம்பழ சின்னத்தை தோ்தல் ஆணையம் ஒதுக்கிவிட்டது.

முகவரிதான் மாறி சென்றுள்ளது. முகவரியை மாற்றி கடிதம் அனுப்புமாறு தோ்தல் ஆணையத்துக்கு கடிதம் கொடுத்துள்ளோம். அங்கிருந்து கடிதம் வந்தால் சின்னம் எங்களுக்கு ஒதுக்கப்படும். சேலத்தில் நடைபெறும் பாமக பொதுக்குழு செயற்குழுவுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். அடையாள அட்டை உள்ளவா்கள் மட்டும் அனுமதிக்கப்படுவா் என்றாா்.

பேட்டியின்போது எம்எல்ஏ இரா. அருள், மாவட்டச் செயலாளா் கதிா் ராஜரத்தினம் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.