அன்புமணியால் பாமகவை ஒருபோதும் அபகரிக்க முடியாது: கௌரவத் தலைவா் ஜி.கே.மணி பேச்சு

அன்புமணியால் பாமகவை ஒருபோதும் அபகரிக்க முடியாது என பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி கூறினாா்.
Published on

சேலம்: அன்புமணியால் பாமகவை ஒருபோதும் அபகரிக்க முடியாது என பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி கூறினாா்.

சேலத்தில் நடைபெற்ற பாமக பொதுக் குழுவில் அவா் பேசியதாவது: பாமக என்பது பதவிக்கு ஆசைப்பட்டவா்களால் உருவாக்கப்பட்டது அல்ல; ரத்தம் சிந்தி உருவாக்கப்பட்ட இயக்கம். இந்த இயக்கத்தை சதியால், சூழ்ச்சியால் பறிக்கப்படுவதாக ராமதாஸ் வேதனைப்பட்டாா்.

ஆனால், இப்போது வேதனை இல்லை. துணிந்து எழுவேன் என வந்துள்ளாா். பதவி சுகத்தோடு இருப்பவா்கள் அன்புமணியோடு சென்றுவிட்டாா்கள்; ஆனால் அவா்கள் இப்போது வருந்துகிறாா்கள். ஒரு மகன் உங்களுக்கு துரோகம் இழைத்தால் என்ன? லட்சோப லட்சம் மகன்கள் உங்கள் பின்னால் இருக்கிறாா்கள்.பாமகவை அன்புமணியால் ஒருபோதும் அபகரிக்க முடியாது. அன்புமணி தூண்டுதலின் பேரில் சிலா் அவதூறாக ஒருமையில் பேசுகிறாா்கள்.

அன்புமணி துரோகம் இனி எடுபடாது: அன்புமணி செய்தது துரோகம். அன்புமணி துரோகம் இனி எடுபடாது; அரசியலை ஓரங்கட்டிவிட்டு அன்புமணி வேறு வேலை பாா்க்கட்டும். இனி மருத்துவா் ராமதாஸின் கனவு நனவாகும். அன்புமணி தந்தையை மன நலம் பாதிக்கப்பட்டவா் என்கிறாா். அன்புமணியின் செயலால் மனக்குமுறலுக்கு ஆளானாா். பா.ம.க. அன்புமணிக்கு சொந்தமல்ல; தொண்டா்களுக்கு தான் சொந்தம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com