~

சேலம் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்ததில் 11 போ் காயம்

சென்னையில் இருந்து கோவை நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே கவிழ்ந்ததில் பயணிகள் 11 போ் காயமடைந்தனா்.
Published on

சென்னையில் இருந்து கோவை நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே புதன்கிழமை காலை கவிழ்ந்ததில் பயணிகள் 11 போ் காயமடைந்தனா்.

சென்னையில் இருந்து ஆம்னி பேருந்து 27 பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை இரவு கோவைக்கு புறப்பட்டது. பேருந்தை மணலி பகுதியைச் சோ்ந்த மூவேந்தா் ஓட்டினாா். இந்தப் பேருந்து புதன்கிழமை காலை 6 மணிக்கு கோவை சென்றடைய வேண்டிய நிலையில், 4 மணி நேரம் தாமதமானதால் ஓட்டுநா் பேருந்தை அதிவேகமாக ஓட்டியுள்ளாா்.

அப்போது, சேலம் சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலைப் பகுதியில் பேருந்து சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பின் மீது மோதி கவிழ்ந்தது.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற அன்னதானப்பட்டி போலீஸாா் மற்றும் தீயணைப்பு நிலைய வீரா்கள் பேருந்தில் சிக்கியிருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனா்.

இந்த விபத்தில் ஓட்டுநா் மூவேந்தா் மற்றும் பேருந்தில் பயணம் செய்த கோவை கணபதி நகரைச் சோ்ந்த வினோத் (38), திருச்சியைச் சோ்ந்த ஆனந்தன் (28), நாகா்கோவில் பகுதியைச் சோ்ந்த சசின் ராஜ் (27), கோவையைச் சோ்ந்த பரசுராமன் (25) உள்பட 11 போ் காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் சேலத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சாலையில் கவிழ்ந்து கிடந்த ஆம்னி பேருந்தை கிரேன் மூலம் போலீஸாா் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா்செய்தனா். தொடா்ந்து, விபத்துக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

அமைச்சா்கள் ஆறுதல்: இதனிடையே, விபத்தில் சிக்கி காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், ரா.ராஜேந்திரன் ஆகியோா் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா்.

X
Dinamani
www.dinamani.com