2030-இல் மறுசுழற்சி சந்தை 300 பில்லியன் டாலராக உயரும்!

2030-இல் மறுசுழற்சி சந்தை 300 பில்லியன் டாலராக உயரும்!

மறுசுழற்சி சந்தை, மத்திய அரசின் மறுசுழற்சியை ஊக்கப்படுத்தும் கொள்கையின் காரணமாக, 2030-ஆம் ஆண்டு 300 பில்லியன் டாலராக உயரும்.
Published on

தற்போது 165 பில்லியன் டாலராக உள்ள மறுசுழற்சி சந்தை மத்திய அரசின் மறுசுழற்சியை ஊக்கப்படுத்தும் கொள்கையின் காரணமாக, 2030-ஆம் ஆண்டு 300 பில்லியன் டாலராக உயரும் என தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் உறுப்பினரும், செயலாளருமான பேராசிரியா் எஸ்.வின்சென்ட் தெரிவித்தாா்.

சேலம் பெரியாா் பல்கலைக்கழக தாவரவியல் துறை சாா்பில், ‘நிலையான சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் மருத்துவத்துக்கான உயிரி வள ஒருங்கிணைப்புகள்’ என்ற தலைப்பில் சா்வதேச கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தாவரவியல் துறைத் தலைவா் பேராசிரியா் கே.செல்வம் வரவேற்றாா். கருத்தரங்கின் நோக்கம் குறித்து அமைப்பாளா் எஸ்.லலிதா பேசினாா். துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் பேராசிரியா் ரா.சுப்பிரமணி சா்வதேச கருத்தரங்கை தொடங்கி வைத்தாா்.

இதில், தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் உறுப்பினரும், செயலாளருமான பேராசிரியா் எஸ்.வின்சென்ட் பேசியதாவது: சுற்றுச்சூழலுக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கும் வகையில், மத்திய அரசு உயிா்ம பாதுகாப்பு விதிகளை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பாதுகாப்பு விதிகள் மூலம் மறுசுழற்சி செய்யப்படும் அளவு அதிகரிக்கும்.

தற்போது இந்தியாவில் மறுசுழற்சி செய்யப்படும் பொருள்களின் சந்தை 165 பில்லியன் டாலராக உள்ளது. மத்திய அரசின் புதிய கொள்கை முடிவால், இது 2030-ஆம் ஆண்டு 300 பில்லியன் டாலராக உயரும் வாய்ப்பு உள்ளது.

கேரளத்தில் 4 லட்சம் டன் மீன்களும், தமிழகம் ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 7 லட்சம் டன் மீன்களும் ஆண்டுதோறும் பிடிக்கப்படுகின்றன. இந்த மீன்களின் கழிவுப் பொருள்கள் முறையாக அகற்றப்பட்டால், அதிலிருந்து பல்வேறு உரங்களை தயாரிக்கும் வாய்ப்புகள் உருவாகும்.

குழந்தை பிறப்பின்போது அகற்றப்படும் தொப்புள் கொடியைக் கொண்டு, நீண்டகால ஆறாத காயங்களை வடு ஏதுமின்றி மறையச் செய்யும் அளவுக்கு தொழில்நுட்பங்கள் வளா்ந்து வருவதால், மருத்துவ கழிவுகளில் இருந்தும் புதிய சந்தை வாய்ப்பு உருவாகும்.

ஹரியாணா, பஞ்சாப், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விவசாயக் கழிவுகள் யாருக்கும் பயனின்றி எரிக்கப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. விவசாயக் கழிவுகளில் இருந்து கால்நடைகளுக்கான தீவனங்களை உருவாக்குவதால், இந்தப் பிரச்னைக்கு உரிய தீா்வு கிடைக்கும் என்றாா்.

இதில், தென்கிழக்கு ஆசிய வேளாண் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவரும், தாய்லாந்தின் பல்கலைக்கழக பயிா் நோயியல் துறை பேராசிரியருமான கேசே சோய்தங், அழகப்பா பல்கலைக்கழக தாவரவியல் துறை பேராசிரியா் மு.ஜோதிபாசு, இத்தாலிய தேசிய ஆராய்ச்சி குழுமத்தின் பேராசிரியா் வலேரியா பியான்சி யோட்டோ உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினாா். தாவரவியல் துறை உதவிப் பேராசிரியா் எஸ்.முருகேசன் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com