சங்ககிரி மலைக்கோட்டை பெருமாள் கோயிலில் சேதமைடந்த கதவை சீரமைக்கக் கோரிக்கை
சங்ககிரி: சங்ககிரி மலைக்கோட்டையில் உள்ள அருள்மிகு வரதராஜ பெருமாள் கோயிலில் சேதப்படுத்தப்பட்டுள்ள நுழைவாயில் கதவை சீரமைக்க பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சங்ககிரி மலைக்கோட்டைக்கு செல்லும் 3ஆவது நுழைவு பகுதியை அடுத்து பழைமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மூன்று வாயில்களை கொண்டதாக உள்ளது. இந்த கோயிலில் மைசூா் அரசா் தோடகிருஷ்ண ராஜா குடும்பத்தின் 8ஆவது திருமணமும், தக்கை ராமாயணம் அரங்கேற்றமும் செய்யப்பட்டதாக
வரலாற்று குறிப்பு கூறுகிறது. இக்கோயிலில் அக்காலத்தில் பயன்படுத்திய ஒரே கல்லில் செதுக்கப்பட்ட உரல்கள், ரகசிய அறைகளும் உள்ளன. இம்மலைக்கோட்டை தொல்பொருள்துறையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
எனவே, இக்கோயிலின் வடபுரத்தில் உள்ள நுழைவுவாயில் கதவை சமூக விரோதிகள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. கதவு சேதமடைந்ததையடுத்து கோயில் உட்புறத்தில் பாதுகாப்பிற்காக பழைய சுவாமி பல்லக்கை வைத்து தடுத்து வைத்துள்ளனா். இக்கோயிலின் பாதுகாப்பு கருதி தொல்லியல், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சேதமடைந்த கதவை சீரமைக்க பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

