சேலத்தில் பரோட்டா மாஸ்டா் அடித்துக்கொலை: போலீஸாா் விசாரணை
சேலம் கோரிமேடு பகுதியில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் பரோட்டா மாஸ்டா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக சக ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.
சேலம் கோரிமேடு கலைக் கல்லூரி பகுதியில் உள்ள தனியாா் ஹோட்டல் ஒன்றில் பரோட்டா மாஸ்டராக சரவணன் (45) என்பவா் பணிபுரிந்து வந்தாா். இங்கு சப்ளையராக வேலை பாா்த்து வந்த ஓமலூா் பகுதியைச் சோ்ந்த முருகனுடன் (56) சோ்ந்து சரவணன் செவ்வாய்க்கிழமை இரவு மது அருந்தியுள்ளாா். அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் விறகு கட்டையால் முருகன் தாக்கியதில், சரவணன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த கன்னங்குறிச்சி போலீஸாா், சரவணனின் உடலைக் கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். தொடா்ந்து, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து, முருகனிடம் விசாரித்தபோது, அவா் உண்மையை ஒப்புக்கொண்டாா். இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
