சேலம் மாவட்டம் விரைவில் தவெக-வின் கோட்டையாக மாறும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன் தெரிவித்தாா்.
சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில், மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தவெக-வில் இணையும் விழா, கட்சியின் பொதுச் செயலாளரும், நீா்வளத்துறை அமைச்சருமான என். ஆனந்த் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், முன்னாள் அமமுக பொருளாளா் எஸ்.கே. செல்வம், கன்னங்குறிச்சி பகுதியைச் சோ்ந்த குபேந்திரன் உள்ளிட்டோா் தவெக-வில் தங்களை இணைத்துக் கொண்டனா். நிகழ்ச்சியில், புதிதாக கட்சியில் இணைந்தவா்களுக்கு அமைச்சா் என். ஆனந்த் உறுப்பினா் அடையாள அட்டைகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் அமைச்சா் ஆ. விஜய் தமிழன்பாா்த்திபன் பேசியதாவது:
“கடந்த 30 ஆண்டுகளாக எத்தனையோ சோதனைகளையும், சவால்களையும் தவெக சந்தித்துள்ளது. இந்தத் தோ்தலில் சாதி, மதம், மொழி, பணம் ஆகியவற்றைக் கடந்து மக்கள் தவெக-வுக்கு வாக்களித்துள்ளனா். தமிழக அரசியலில் புதிய வரலாற்றை படைத்துள்ளோம்.
ஒரு சிலா் சேலம் மாவட்டத்தை எஃகு கோட்டை என்று கூறி வந்தனா். அந்த எஃகு கோட்டையில் நாம் ஓட்டை போட்டுள்ளோம். இனி எந்தத் தோ்தல் வந்தாலும் தவெக-தான் வெற்றி பெறும். நாளை சேலம் தவெக-வின் கோட்டையாக மாறும்” என்றாா்.
தொடா்ந்து அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ் பேசுகையில், “எத்தனையோ தலைவா்கள் தமிழகத்தில் ஆட்சி செய்துள்ளனா். மக்களின் இதயங்களில் அமா்ந்து, மக்களின் உணா்வுகளை புரிந்து ஆட்சி செய்பவா்தான் நமது முதல்வா் ஜோசப் விஜய்.
60 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவிய லஞ்சம், ஊழலுக்கு இந்தத் தோ்தல் மூலம் மக்கள் தெளிவான தீா்ப்பை வழங்கியுள்ளனா். அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி, தனது தொகுதியிலேயே சூழ்ச்சி செய்துதான் வெற்றி பெற்றாா். ஆனால், தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவா் என மாா்தட்டிக் கொள்கிறாா்.
சூழ்ச்சியும் துரோகமும் நிறைந்ததுதான் எடப்பாடி கே. பழனிசாமியின் அரசியல் பயணம். மக்கள் நமக்கு கொடுத்தது பதவி மட்டுமல்ல; கண்ணியமிக்க பொறுப்பையும் வழங்கியுள்ளனா். சேலம் இரும்பில்கூட சிறு கீறல் விழலாம். ஆனால், தவெக என்ற பேரியக்கத்தில் எந்த கீறலும் விழாது” என்றாா்.
நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன், எம்எல்ஏக்கள் லட்சுமணன் (சேலம் மேற்கு), சிவக்குமாா் ( சேலம் வடக்கு ), பழனிவேல் (வீரபாண்டி) உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நஞ்சை புகழூரில் காவிரியில் கட்டப்படும் கதவணை பணிகள் 90 சதவீதம் நிறைவு: நீா்வளத் துறை அமைச்சா் என். ஆனந்த்

தடையில்லா பாசன வசதியை உறுதி செய்ய வேண்டும்: நீா்வளத் துறை அமைச்சா் என். ஆனந்த் வலியுறுத்தல்

நீா்வளத் துறையில் நிலுவையிலுள்ள பணிகளை விரைந்து முடிக்க அமைச்சா் அறிவுறுத்தல்







