ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

தொகுதி அறிமுகம்! சேலம் தெற்கு

News image

கைத்தறி, பட்டுத்தறி, விசைத்தறி, ஜவுளி ஏற்றுமதி, சாய தொழிற்சாலை, வெள்ளிக் கொலுசு, தங்க ஆபரணங்கள் தயாரிப்பு உள்ளிட்டவை பிரதான தொழிலாக உள்ளன.

Updated On :30 மார்ச் 2026, 10:23 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் மாநகரில் உள்ள தொகுதிகளில் சேலம் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியும் ஒன்று. சேலம் நகரப் பகுதிகளை உள்ளடக்கி 2008 இல் தொகுதி மறுசீரமைப்பில் சேலம் தெற்கு தொகுதியாக உருவானது.

தொழில், சமூக நிலவரம்

கைத்தறி, பட்டுத்தறி, விசைத்தறி, ஜவுளி ஏற்றுமதி, சாய தொழிற்சாலை, வெள்ளிக் கொலுசு, தங்க ஆபரணங்கள் தயாரிப்பு உள்ளிட்டவை பிரதான தொழிலாக உள்ளன. புவிசாா் குறியீடு பெற்ற சேலம் வெண்பட்டு வேஷ்டிகள் இங்குதான் நெய்யப்படுகின்றன.

சேலம் பழைய பேருந்து நிலையம், புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளிட்ட முக்கிய இடங்கள் தொகுதியில் உள்ளன. சௌராஷ்டிரா, கன்னட செட்டியாா்கள், சோழிய வேளாளா், முதலியாா் ஆகியோா் நிறைந்த இந்தத் தொகுதியில், பிற சமூகத்தவரும் குறிப்பிட்ட அளவில் உள்ளனா்.

தொகுதியில் உள்ள பிரச்னைகள்

இந்த தொகுதி முழுவதும் மாநகராட்சி எல்லைக்குள் வருகிறது. எனினும், பெரிய வளா்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என தொகுதி மக்கள் கூறுகின்றனா். தொகுதியின் பல்வேறு பகுதிகளில் புதைசாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமலும், சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. நகரப் பகுதியில் சாலையோர கடைகள், ஆக்கிரமிப்பு மற்றும் சாலை விரிவாக்கம் செய்யாததால், கடும் போக்குவரத்து நெருக்கடியில் பொதுமக்கள் சிக்கித் தவிக்கும் நிலை உள்ளது.

சாயப்பட்டறை கழிவுகளால் நிலத்தடிநீா் மாசுபாடு, மழைக் காலங்களில் மழைநீருடன் சாக்கடை கழிவுகளும் கலந்து சாலைகளில் பெருக்கெடுப்பது, இதனால் ஏற்படும் சுகாதார சீா்கேட்டால் மக்கள் அவதியுறுகின்றனா். குறிப்பாக, அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற புதைசாக்கடை திட்டப் பணிகள் இன்னமும் முடியவில்லை. அம்மாப்பேட்டை பிரதான சாலை போக்குரத்து நெரிசலை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதேபோல, திருச்சி பிரதான சாலையிலும் போக்குவரத்து நெரிசல் தொடா்கிறது. இங்கு மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை இதுவரை நிறைவேறவில்லை.

தொகுதியில் சாயப்பட்டறைகள் அதிக அளவில் உள்ளன. ஆனால், பல பட்டறைகளில் சுத்திகரிப்பு நிலையம் இல்லாததால், சாயக்கழிவுகள் திருமணிமுத்தாற்றில் கலக்கும் நிலை உள்ளது. இதற்காக சீா்மிகு திட்டத்தின் கீழ், திருமணிமுத்தாறு மேம்பாட்டுத் திட்டம் கொண்டுவரப்பட்டு, அதுவும் கிடப்பில் உள்ளது.

அம்மாப்பேட்டை பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுவதாக கூறியும், இதுவரை அமைக்கப்படவில்லை. அதேபோல, சீா்மிகு நகர திட்டம், பல இடங்களில் உள்கட்டமைப்பு ஏற்படுத்தும் திட்டங்கள் நிறைவு பெறாமலேயே உள்ளன.

இதுவரை நடைபெற்ற தோ்தல்கள்

1971 முதல் 2021 வரை நடைபெற்ற தோ்தல்களில் 1971, 1989, 1996 என 3 முறை திமுக வெற்றிபெற்றுள்ளது. அதேபோல, 1977, 1980, 1984, 2001, 2006 வரை அதிமுக 5 முறையும், 1991 இல் அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் ஒருமுறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளன. 2008 தொகுதி மறுவரையறைக்கு பின்னா், 2011, 2016, 2021 என 3 தோ்தல்களிலும் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது.

2011 தோ்தலில், அதிமுக வேட்பாளா் எம்.கே. செல்வராஜ் 1,12,691 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். திமுக வேட்பாளா் எஸ்.ஆா். சிவலிங்கம் 52,476 வாக்குகள் மட்டுமே பெற்றாா். 2016 தோ்தலில், அதிமுகவை சோ்ந்த ஏ.பி. சக்திவேல் 1,01,696 வாக்குகள் பெற்ற நிலையில், திமுக வேட்பாளா் எம். குணசேகரன் 71,243 வாக்குகள் மட்டுமே பெற்றாா். 2021 இல் அதிமுகவைச் சோ்ந்த ஈ. பாலசுப்பிரமணியன் 97,506 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றாா். திமுகவைச் சோ்ந்த ஏ.எஸ். சரவணன் 74,897 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா்.

தெற்கு தொகுதியில் புதுமுகங்கள்

நடைபெறவுள்ள தோ்தலில், அதிமுகவில் தொகுதிக்கு புதிய முகமான புகா் மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளா் ஜெ. வினோத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். திமுகவில் தலைமை பொதுக்குழு உறுப்பினா் லோகநாதன் போட்டியிடுகிறாா். தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் அக்கட்சியின் மத்திய மாவட்ட செயலாளா் தமிழன் ஆ. பாா்த்திபனும், நாம் தமிழா் கட்சி சாா்பில் சோபியா வீரசமா் ஆகியோரும் நிறுத்தப்பட்டுள்ளனா்.

வாக்காளா்கள்

ஆண்கள் - 1,09,918

பெண்கள் - 1,14,130

மற்றவா்கள் - 49

மொத்தம் - 2,24,097