விவசாயிகளின் நலனுக்கான விரிவாக்க சேமிப்புத் திட்டம் ஆத்மா

ராமநாதபுரம், ஆக. 18:    விவசாயிகளின் நலனுக்காகக் கொண்டு வரப்பட்டுள்ள விரிவாக்க சீரமைப்புத் திட்டமே வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை ஆத்மா திட்டம் என  அழைக்கப்படுகிறது.  வேளாண்மை பண்ணை முறைகளில் புதிய தொழில
Updated on
2 min read

ராமநாதபுரம், ஆக. 18:    விவசாயிகளின் நலனுக்காகக் கொண்டு வரப்பட்டுள்ள விரிவாக்க சீரமைப்புத் திட்டமே வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை ஆத்மா திட்டம் என  அழைக்கப்படுகிறது.

 வேளாண்மை பண்ணை முறைகளில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தவும், விவசாய அமைப்புகளில் உள்ள தொழில்நுட்பக் குறைபாடுகளைக் களையவும்,இயற்கைவள  மேம்பாட்டினை அதிகரிக்கவும் உருவாக்கப்பட்ட திட்டமே, ஆத்மா திட்டம் ஆகும்.

 இத்திட்டம் மூலம் நடைமுறைகளில் உள்ள இடர்பாடுகள் மற்றும் குறைகளைக் களைந்து செயலாற்றப்பட உள்ளது. தொழில்நுட்ப பரிமாற்றத்தில் புதிய அணுகுமுறையின்  மூலம் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கம் ஆகியனவற்றின் கூட்டு முயற்சியை பலப்படுத்த வழிவகுத்திருக்கிறது இத்திட்டம்.

 திட்டமிடுதலில் விவசாயிகளின் பங்கை மேம்படுத்தி, வட்டார அளவில்  வழங்கப்படும் நிதி உதவியைப் பிரித்து வழங்கும் திட்டச் செயலாக்கத்தில் அவர்களை ஈடுபடுத்திடவும் பண்ணை வழி அணுகுமுறையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.  இதனைச் செயல்படுத்த ஆத்மா திட்டம், மாவட்ட அளவில் தொடங்கப்பட்டு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு செயல்படுகிறது.

 பண்ணைகள் மற்றும் பண்ணை முறைகள் மீது கவனம் செலுத்துதல்,பல்வேறு துறைகளின் விரிவாக்கப் பணிகளை ஒருங்கிணைத்தல்,பண்ணை முறைகளைத்  தீவிரப்படுத்துதல் மற்றும் விற்பனையில் உதவி புரிதல், விளைபொருள்களின் மதிப்பைக் கூட்டி விற்பனைக்கு உதவி செய்தல், விவசாய சமுதாயத்துக்கு திட்டமிடுதலில் அதிகாரம் வழங்குதல், பலமுனைத் தகவல் பரிமாற்ற ஏற்பாடுகள் ஆகியனவும் இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.

 ஆராய்ச்சியாளர்கள்,விரிவாக்கப் பணியாளர்கள்,விவசாயிகள்,தனியார் நிறுவனங்கள்,தொண்டு நிறுவனங்கள் போன்றோரை ஒருங்கிணைத்து மாவட்ட விரிவாக்கத் திட்டம் தயாரித்து, தொழில்நுட்பப் பரிமாற்றத்தில் புதிய அணுகுமுறைகளைக் கண்டறிவது போன்ற பணிகளையும் இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளலாம்.

 இத்திட்டச் செயலாக்க அணுகுமுறைகள்:

 அரசு விரிவாக்க முறைகளைச் செயல்படுத்துதல்,தனியார் நிறுவனங்களையும் தேவைப்பட்டால் மாற்றாக ஈடுபடுத்திக் கொள்ளுதல்,தகவல் தொழில்நுட்பம் மற்றும் வானொலி,தொலைக்காட்சி, பத்திரிகைகளை விரிவாக்கப் பணிகளில் வலுப்படுத்துதல், விரிவாக்கப் பணிகளில் மகளிரை ஈடுபடுத்துதல், விவசாயிகள் மற்றும் விரிவாக்கப் பணியாளர் தொழில்நுட்ப அறிவு மற்றும் செயல்திறனை மேம்படுத்துல் போன்றவையுமாகும்.

  இத்திட்டம் குறித்து, ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ந. சத்தியமூர்த்தி கூறியதாவது: ஒவ்வொரு வட்டாரம் வாரியாக 11 ஆத்மா குழுக்கள்  உருவாக்கப்பட்டு நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வட்டார அளவில் விவசாயப் பிரதிநிதி, கால்நடை, மீன்வளம், தோட்டக்கலை, மகளிர் சுயஉதவிக் குழுக்கள், தனியார் உர விற்பனை பிரதிநிதி, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த

பிரதிநிதி ஆகியோரை ஒருங்கிணைத்து வேளாண் ஆலோசனைக்குழுவும் அமைக்கப்பட்டு குழுவின் தலைவராக ஒரு விவசாயி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 வட்டாரத் தொழில்நுட்பக் குழுவும், வேளாண் ஆலோசனைக் குழுவும் இணைந்து வட்டார அளவில் வேளாண்மை தகவல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை மையமும் துவங்கியுள்ளோம்.

 இம்மையமே வட்டார அளவில், அனைத்து விரிவாக்கப் பணிகளையும் திட்டங்களையும் செயல்படுத்துகிறது. ஆத்மா திட்டத்தின் வழிமுறைகளைச் செயல்படுத்த இம்மையத்திற்கு வட்டார அளவில் நிதியும் வழங்கப்படுகிறது.

 வட்டார தொழில்நுட்பக் குழுவின் தலைவர் மற்றும் வேளாண் ஆலோசனைக் குழுவின் தலைவர் ஆகிய இருவரையும் சேர்த்து ஆத்மா திட்டத்திற்காக

வங்கியில் கூட்டுக் கணக்கு துவங்கப்பட்டு வரவு, செலவுகள் வங்கிக் கணக்கில் பராமரிக்கப்படுகிறது.

   பொதுவாக திட்டங்கள் மாநில அளவில் தயாரிக்கப்பட்டு, வட்டார அளவில் செயல்படுத்தப்படும். ஆனால் ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்குத் தேவையான தொழில்நுட்பங்கள், அவர்களது பிரச்னைகள் தொடர்பான ஆராய்ச்சிகள்,திட்டங்கள் எவை என மக்கள் பங்கேற்பு திறனாய்வு முறையைக் கையாண்டு மிகவும் பயனுள்ளதாக திட்டங்கள் தயாரிக்கப்படுகிறது.

  இத்திட்டத்துக்கு மத்திய அரசு 90 சதவிகித நிதியும், மாநில அரசு 10 சத நிதியும் வழங்குகிறது.  விவசாயிகளுக்கான பயிற்சிகள்,செயல்விளக்கங்கள்,பட்டறிவுப் பயணங்கள், கருத்துக்காட்சிகள்,பண்ணைப் பள்ளிகள் அமைத்தல் மற்றும் விவசாயிகளில் ஆர்வலர் குழுக்களை அமைத்தல் ஆகியனவும், ஆத்மா திட்டத்தினால் செயல்படுத்தப்படும் விரிவாக்கத் திட்டங்களாகும்.

 நயினார்கோவில் வட்டாரத்தில் காரடர்ந்தகுடியிலும், திருப்புல்லாணியில், புக்குளம் கிராமத்திலும் பருத்தி பயிரில் பண்ணைப்பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. இந்த செயல்திடலில் ஒருங்கிணைந்த களை நிர்வாகம்,ஒருங்கிணைந்த உர நிர்வாகம்,ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு போன்ற தொழில்நுட்பங்களும் கடைபிடிக்கப்பட்டு மற்ற விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

 இதுதவிர விவசாயிகளுக்கு இப்பண்ணைப் பள்ளிகள் மூலம் அறுவடை உத்திகள், சேமிப்பு உத்திகள், விற்பனை தொடர்பான வழிமுறைகளும் கற்றுத் தரப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com