/

அடிப்படை வசதியின்றி ஊர்ப்புற நூலகங்கள்!

மதுரை,  நவ. 30:  மதுரை மாவட்டத்தில் பல்வேறு ஊர்ப்புற நூலகங்களும் கட்டடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்பட்டு வருகின்றன.  வாசிப்பவர்களின் அறிவைப் பெருக்கும் அட்சயப் பாத்திரங்கள் நூலகங்கள் என்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:00 am

வே.சுந்தரேஸ்வரன்

மதுரை,  நவ. 30:  மதுரை மாவட்டத்தில் பல்வேறு ஊர்ப்புற நூலகங்களும் கட்டடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்பட்டு வருகின்றன.

 வாசிப்பவர்களின் அறிவைப் பெருக்கும் அட்சயப் பாத்திரங்கள் நூலகங்கள் என்றால் அது மிகையாகாது. தமிழகத்தின் 32 வருவாய் மாவட்டங்களில் 1,670 கிளை நூலகங்கள், 1700 ஊர்ப்புற நூலகங்கள் மற்றும் பகுதிநேர நூலகங்கள், நடமாடும் நூலகங்கள் உள்பட சுமார் 4,500 நூலகங்கள் இயங்கி வருகின்றன.

 மதுரை மாவட்டத்தில் மாவட்ட மைய நூலகம், 59 கிளை நூலகங்கள், 58 ஊர்ப்புற நூலகங்கள் மற்றும் பகுதிநேர நூலகங்கள் உள்பட சுமார் 130 நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

 ஊர்ப்புற நூலகங்களில் பல ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதால், அவற்றின் பயன் முழு அளவில் பொதுமக்களுக்குச் சென்றடையாமல் உள்ளது. மேலும், பல ஊராட்சிகளில் இந்த வகை நூலகங்கள் போதிய அடிப்படை வசதியின்றி செயல்பட்டு வருவதாக, நூலகத் துறையினரே தெரிவிக்கின்றனர்.

   மதுரையில் நிலையூர் நூலகம் உள்பட, சில ஊர்ப்புற நூலகங்கள் ஊர்ச் சாவடியில் இயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, 59 ஊர்ப்புற நூலகங்களில் காக்கோட்டை, சருகுவலையப்பட்டி, திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட சில நூலகங்கள் மட்டுமே சொந்தக் கட்டடத்தில் இயங்கி வருகின்றன. பிற நூலகங்கள் அந்தந்த  ஊராட்சி நிர்வாகத்தால் இலவசமாக அளிக்கப்பட்டுள்ள சிறிய அறைக் கட்டடத்திலேயே செயல்படுகின்றன.

 இதனால், மழைக் காலங்களில் ஊர்ப்புற நூலகங்கள் செயல்படுவதில் சிரமம் இருந்து வருகிறது. பல நூலகங்களிலும் நூல்களை அடுக்கிவைப்பதற்கு இடம் இன்றி தரையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.  

மதுரை உத்தங்குடி ஊராட்சியில் அய்யனார் கோயில் அருகே உள்ள ஊர்ப்புற  நூலகம் கடந்த 12 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

சிறிய அறையில் சுமார் 7 ஆயிரம் நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. சுமார் 400 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு  விலை மதிப்புள்ள பல நூல்களும் தரையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. பல நூல்கள்   மூட்டைகளாகக் கட்டப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. 5 பேருக்கு மேல் அமர்ந்து படிப்பதற்குக்கூட இடமில்லாததால், வாசகர்கள் அதிகம் வரும்போது பலரும் நின்றுகொண்டே படிக்கும் நிலை உள்ளது. இதனால், மழைக் காலங்களில் பலர் நூலகம் வருவதைத் தவிர்த்து விடுகின்றனர்.

  இந்த நூலகத்திற்கு அருகிலேயே அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் 2009-2010-ம் நிதியாண்டில் | 3.25 லட்சம் செலவில் புதிய நூலகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.

   மக்களிடம் வசூலிக்கப்படும் நூலக வரியை உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து முறையாக வசூலித்தால்கூட, இதுபோன்ற அடிப்படை வசதிகளை எளிதாக நிறைவேற்ற முடியும் என்கின்றனர் நூலக ஆர்வலர்கள்.  நகர்ப்புறங்களை ஒப்பிடுகையில் கிராமப்புற மக்களுக்கு கல்வி வாய்ப்புப் பெறுவதற்கு இதுபோன்ற ஊர்ப்புற நூலகங்கள் ஒரு கருவியாக இருக்கிறது என்பதால், இந்த நூலகங்களுக்கு உரிய கட்டட வசதியை ஏற்படுத்தித் தருவதுடன், செயல்படாத நூலக கட்டடங்களை இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நூலக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.