விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சாலையோர மனநோயாளிகளுக்கு விடிவுகாலம்! மதுரையில் விரைவில் அரசின் "மறுவாழ்வு மையம்'

மதுரை, டிச. 30:  சாலையோர மனநோயாளிகளிக்கு சிகிச்சையும், தொழில் பயிற்சியும் அளிக்கும் வகையில், அரசின் சார்பில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையம், மதுரையில் விரைவில் அமைக்கப்பட உள்ளது.    அ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:59 am

வே.சுந்தரேஸ்வரன்

மதுரை, டிச. 30:  சாலையோர மனநோயாளிகளிக்கு சிகிச்சையும், தொழில் பயிற்சியும் அளிக்கும் வகையில், அரசின் சார்பில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையம், மதுரையில் விரைவில் அமைக்கப்பட உள்ளது.

   அழுக்கேறிய துணி, பரட்டைத் தலை, எதைப் பற்றியும் கண்டுகொள்ளாத மனப்போக்குடன் சாலையோரங்களிலும், கோயில் பகுதிகளிலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அலைந்து திரிகின்றனர். முறையான சிகிச்சை, பயிற்சி அளிப்பதன் மூலம் இத்தகையோரை குணப்படுத்தி விட முடியும் என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.

 இதைக் கருத்தில்கொண்டு மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சையும், மறுவாழ்வுப் பயிற்சியும் அளிக்கும் நோக்கில், தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை 4.6.2010-ல் ஓர் அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு ஒரு மறுவாழ்வு மையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

    மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களை இணைத்து மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையம் மதுரையில் அமைக்கப்பட உள்ளது.

  பொதுவாக, சாலையில் சுற்றித் திரியும் மனநோயாளிகள் போலீஸôரால் பிடிக்கப்படும்போது, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உரிய மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் சேர்க்கப்படுவது வழக்கம். இதனால், வீண் அலைச்சல் ஏற்படுவதுடன், மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியதையும் கருத்தில்கொண்டு, இதுபோன்று மூன்று மாவட்டங்களை ஒருங்கிணைத்து மறுவாழ்வு மையம் அமைக்கப்படுவதாக மாற்றுத் திறனாளிகள் நலத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

   சாலையில் சுற்றித் திரியும் மனநிலை பாதித்தவர்களைக் கண்டறிந்து மனநலச் சட்டம் 1987-ன்படி பிரிவு 23-ன் கீழ் அவர்களைக் கைது செய்து, கைதாகும் காவல் சரக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, உரிய மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகே அவர்கள் மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்படுவர்.

    மனநிலை பாதிக்கப்பட்டவர் எந்த ஊரைச் சேர்ந்தவர், அவர் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவரா? உண்மையில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர்தானா? என்பன போன்ற விவரங்களைக் கண்டறிவதற்காக போலீஸில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, உரிய மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் நீதிமன்றம் மூலம் காப்பகத்தில் வைக்க அனுமதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

    தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் ஆணையின்படி, திருச்சி, மதுரை, கோவை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், சேலம், திருவாரூர் உள்ளிட்ட 10 இடங்களில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு மையம் அமைக்கப்பட உள்ளது. இதுதவிர, 30 துணை மையங்களும் அமைக்கப்பட உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

   மதுரை மாவட்டத்தில் அருள்மிகு மீனாட்சி அம்மன் கோயில் பகுதி, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதி, மாநகர் பகுதி சாலையோரங்கள், பஸ் நிலையம், ரயில் நிலையங்களில் மனநோயாளிகள் சுற்றித் திரிவதாக கண்டறியப்பட்டுள்ளனர். வீடுகளில் வைத்து பராமரிக்கப்படுவோர் உள்பட மாவட்டத்தில் சுமார் 234 மனநோயாளிகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

    இதேபோன்று, திண்டுக்கல், தேனி ஆகிய அண்டை மாவட்டங்களிலும் மனநலம் பாதிக்கப்பட்டோரைக் கண்டறிந்து, அவர்களை மறுவாழ்வு மையத்தில் சேர்ப்பதற்காக இரு தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.

 தமிழக அரசு நிதியுதவியுடன் அமைக்கப்படும் இந்த மறுவாழ்வு மையத்தில் ஒரு மேலாளர், காப்பாளர், செவிலியர், தொழிற்பயிற்சி அளிப்பவர், சமையலர் ஆகியோர் பணியில் அமர்த்தப்படுவர். இதுவிர, மையத்தில் வைக்கப்படும் மனநோயாளிகளுக்கு சீருடை, மருந்து, உணவு, உடை, படுக்கை ஆகிய வசதிகளும் அளிக்கப்படும். இதற்கான பொறுப்பு, மதுரையைச் சேர்ந்த ஓர் அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

  இதற்காக தற்போது சுமார் 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மையத்தை ஓரிரு வாரங்களில் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

   மதுரைக்கு ஆன்மிகப் பயணமாக பிகார், ஒரிசா, உத்தரப்பிரதேசம் போன்ற வடமாநிலங்களைச் சேர்ந்த பலரும் சுற்றுலா பஸ்களில் வருகின்றனர், அப்படி வரும் சிலர், மனநிலை பாதித்தவர்களை தங்களுடன் அழைத்து வந்து சாலையோரங்களில் இறக்கிவிட்டுச் சென்றுவிடுவதாகவும் கூறப்படுகிறது.

    இதுபோன்ற பலர் சாலையோரங்களில் அலைந்து திரிகின்றனர். அவர்களுக்கு சில அமைப்புகள் உணவு வழங்குவதாகக் கூறிக்கொண்டாலும், முறையாகப் பராமரித்து அவர்களின் நோயைத் தீர்க்க யாரும் முனைப்புக் காட்டவில்லை என்பதே நிதர்சன உண்மை.     இதுபோன்ற சூழலில் மறுவாழ்வு மையம் அமைக்கப்படுவது, மனநலம் பாதித்தவர்களின் வாழ்வில் விடிவுகாலத்தை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.