விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தனியார் பள்ளிகளில் ரசீது கொடுக்காமல் கூடுதல் கட்டண வசூல்: பெற்றோர் அதிருப்தி

மதுரை,  ஜூன் 3: தனியார் பள்ளிகளின் கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ள நிலையில், மதுரை உள்ளிட்ட இடங்களில் சில தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இது, பெற்றோர்களிடையே அதிருப்திய

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:18 pm

வே.சுந்தரேஸ்வரன்

மதுரை,  ஜூன் 3: தனியார் பள்ளிகளின் கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ள நிலையில், மதுரை உள்ளிட்ட இடங்களில் சில தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இது, பெற்றோர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

   தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுவதாக கல்வியாளர்கள், பெற்றோர்கள் இடையே பரவலாக புகார் எழுந்தது. இதையடுத்து, மாநிலத்தில் உள்ள 10 ஆயிரத்து 951 பள்ளிகளிலும் கட்டணத்தை முறைப்படும் வகையில், தமிழக சட்டப் பேரவையில் கடந்தாண்டு பள்ளிக் கட்டணம் முறைப்படுத்தும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து நீதிபதி கே.கோவிந்தராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

  இக் குழுவானது, தனியார் பள்ளிகளின் உள்கட்டமைப்பு, ஆசிரியர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அப்பள்ளி நிர்வாகத்திடம் இருந்து பெற்று, அதன் அடிப்படையில் பள்ளிக் கட்டணத்தை நிர்ணயித்துள்ளது.

  அதன்படி, தொடக்கப் பள்ளிகள் ரூ.3,500, நடுநிலைப் பள்ளிகள் ரூ.5,000, உயர்நிலைப் பள்ளிகள் ரூ.8,000, மேல்நிலைப் பள்ளிகள் ரூ.11 ஆயிரம் வசூலிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

  இந்நிலையில், இக் கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தனியார் பள்ளிகள் விடுத்த வேண்டுகோளை ஏற்று அதுதொடர்பாக அரசிடம் மேல்முறையீடு மனுக்கள் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

 இதுகுறித்து தணிக்கையாளர்கள் குழு ஆய்வு செய்து வருதாகவும், அந்த ஆய்வறிக்கை வரும் வரை அரசு நிர்ணயித்த கட்டணத்தைத்தான் வசூலிக்க வேண்டும் என்றும், மறுபரிசீலனைக்குப் பிறகு நிர்ணயிக்கப்படும் கட்டணத்தை மாணவர்களிடம் இருந்து பள்ளிகள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் நீதிபதி கே.கோவிந்தராஜன் தெரிவித்திருந்தார்.

  இந்நிலையில், ஜூன் 1-ம் தேதி தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் திறக்கப்பட்டன. தனியார் பள்ளிகள் பலவும் திறக்கப்பட்டன. மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பல தனியார் நர்சரி தொடக்கப் பள்ளிகள் மற்றும் சில மெட்ரிக் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள.

  சமச்சீர் பாடங்களை விநியோகிக்க தயக்கம்:     இந்த நிலையில், சில தனியார் மெட்ரிக் பள்ளிகள் சமச்சீர் பாடப்புத்தங்களை விநியோகிக்க தயக்கம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.     

  அதாவது, 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கான சமச்சீர் கல்விமுறையிலான பாடங்கள் தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் அரசுப் பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளுக்கு கட்டணம் ஏதுமின்றி இலவசமாக வழங்கப்படுகிறது.

  மெட்ரிக் பள்ளிகள் உள்ளிட்ட தனியார் பள்ளிகளுக்கு 1-ம் வகுப்புக்கு ரூ.200 விலையிலும் (ரூ.10 கமிஷன் தொகை உள்பட), 6-ம் வகுப்புக்கு ரூ.250 விலையிலும் (ரூ.12.50 கமிஷன் தொகை உள்பட) வழங்கப்படுகிறது.

  ஏற்கெனவே தனியார் பள்ளிகள் 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு அதிகமான விலையில்  

தோராயமாக ரூ.800 விலையில் பாடப்புத்தகங்களை வெளியில் இருந்து வாங்கி கொடுத்த வந்த நிலையில், தற்போது குறைந்த விலையில் சமச்சீர் கல்விப் பாடப் புத்தங்களை வழங்கும்போது பெற்றோர்களிடம் அது விழிப்புணர்வை ஏற்படுத்திவிடும் என்று தயங்குவதாகவும் தெரிகிறது.

  இதனிடையே, சில பள்ளிகளில் எல்.கே.ஜி.க்கு ரூ.550 முதல் ரூ.750 வரையிலும், யு.கே.ஜி.க்கு ரூ.670 முதல் ரூ.800 வரையிலும், 2-ம் வகுப்புக்கு ரூ.800 முதல் 1000 வரையிலும் பாடப்புத்தகங்கள் வழங்குவதற்கான கட்டணமாக பள்ளி நிர்வாகம் வசூலிப்பில் ஈடுபட்டுள்ளன.

  சமச்சீர் கல்விப் பாடத்தை 1-ம் வகுப்புக்கு ரூ.190-க்கு அரசு வழங்கி வரும்போது தனியார் பள்ளிகள் மூன்று மடங்கு கூடுதலாக பாடப்புத்தகங்களுக்கான கட்டணத்தை வசூலிப்பது பெற்றோர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

  இதுகுறித்து கல்வித் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவரிடம் விசாரித்தபோது தனியார் பள்ளிகள், பாடப்புத்தகங்களை வெளியில் உள்ள தனியார் அச்சகத்தினரிடம் இருந்து ஆர்டர் கொடுத்து வாங்குகின்றனர்.

சில பள்ளிகள் மொத்த விலைக் கடைகளில் வாங்குகின்றனர். அவ்வாறு வாங்கும்போது ஒரு குறிப்பிட்ட பாடப்புத்தகத்தின் அதிகபட்ச சில்லறை விலையில் இருந்து சுமார் 40 சதவீதம் கமிஷனைக் கழித்துக் கொண்டு வாங்குகின்றன. இதுபோன்று வாங்குவதால் ரூ.600-க்கு பாடப்புத்தகங்கள் வாங்கும் ஒரு மாணவரிடமிருந்து மட்டும் சுமார் ரூ.240 சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்துக்கு லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. இதைக் கணக்கில் கொண்டால் ஏகப்பட்ட தொகை லாபமாக கிடைக்கும். இதனால்தான் வெளியில் இருந்து  பாடப்புத்தங்களை வாங்குவதற்கு பள்ளிகள் ஆர்வம் காட்டுகின்றன என்றார்.

   இந்தப் பாடப்புத்தகங்களை அரசே ஏன் அச்சடித்து வழங்கக் கூடாது அல்லது பாடப்புத்தகங்களின் விலையைக் கட்டுப்படுத்தக் கூடாது என்றும் கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

  மதுரையில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று 6-ம் வகுப்பு மாணவரிடம் ரூ.500-க்கு சமச்சீர் பாடப் புத்தகங்களை கொடுத்துள்ளது. மேலும், டியூஷன் கட்டணமாக ரூ.10 ஆயிரம் வசூலித்துள்ளது. ஆனால், அதற்கான ரசீது கொடுக்கவில்லை என்று அந்த மாணவரின் தந்தை தெரிவித்தார்.

  இதேபோன்று மதுரை புறநகர் பகுதியில் உள்ள மெட்ரிக் பள்ளியில் தனது மகனின் எல்.கே.ஜி. சேர்க்கைக்காக ரூ.4 ஆயிரம் சேர்க்கை கட்டணமாகவும், மாத கல்விக் கட்டணமாக ரூ.200-ம் கொடுத்துள்ளதாகவும், அதற்கான ரசீது தராததால் புகார் தெரிவிக்க முடியவில்லை என்று தனியார் நிறுவன ஊழியர் தெரிவித்தார்.     

   பள்ளியின் உள்கட்டமைப்பு வசதி, ஆசிரியர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு வசதிகளின் அடிப்படையில்தான் அரசானது கட்டணத்தை நிர்ணயித்த போதிலும் அதற்கான எவ்வித வசதிகள் இன்றியும், அதேநேரம் பெரிய பள்ளிகளுக்கு இணையாக சிறிய பள்ளிகள் கட்டண வசூலிப்பில் ஈடுபட்டு வருகின்றன என்றும் அவர் புகார் தெரிவித்தார்.

  புகார் தெரிவிக்க வழியின்றி தவிப்பு: தனியார் பள்ளிகளின் கட்டணத்தை நிர்ணயித்துள்ள கோவிந்தராஜன் கமிட்டி, அந்தக் கட்டண விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு  தபால் மூலம் தெரிவித்துள்ளது. ஆனால், அந்தக் கட்டண விவரம் பற்றி அந்தந்த மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கே தெரியப்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.   

   மேலும், தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கு, அரசு எந்தக் கட்டணத்தை நிர்ணயித்துள்ளது என்ற விவரமும் பெற்றோர்களுக்கு தெரியாததால் அவர்கள் கேட்கும் கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்து எங்கு சென்று புகார் தெரிவிப்பது என்பது கூட தெரியாமல் பெற்றோர்கள் தவிக்கின்றனர்.

   இதுகுறித்து மதுரை அச்சம்பத்தை சேர்ந்த இல்லத்தரசி ராணி கூறுகையில், தனியார் பள்ளிகளுக்கு கட்டணத்தை அரசு நிர்ணயித்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. கல்விச் செலவு குறையும் என்றும் எதிர்பார்த்தோம். ஆனால், அது முழுமையாக நிறைவேற்றப்படாத நிலை காணப்படுகிறது.

இந்த விஷயத்தை அரசு மிக கவனமாக எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், அந்தந்த பள்ளிகள் முன்பாக கட்டண விவரம் மற்றும் ஏதேனும் புகார் இருந்தால் அதுபற்றி தெரிவிக்க வேண்டிய அரசு அதிகாரிகளின் முகவரி தாங்கிய விளம்பரப் பலகை வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.