/

4.48 கோடி சமச்சீர் கல்வி இலவச பாடநூல் வழங்கத் திட்டம்

மதுரை, ஏப். 29:  வரும் கல்வியாண்டுக்காக (2011-12) தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4.48 கோடி சமச்சீர் கல்வி பாடநூல்களை மே இறுதிக்குள் தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் வழங்க பள்ளிக் கல

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:25 am

வே.சுந்தரேஸ்வரன்

மதுரை, ஏப். 29:  வரும் கல்வியாண்டுக்காக (2011-12) தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4.48 கோடி சமச்சீர் கல்வி பாடநூல்களை மே இறுதிக்குள் தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் வழங்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

 தமிழகத்தில் கடந்தாண்டு 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டின்போது பள்ளி வகுப்பு தொடங்கும் ஜூன் 1-ம் தேதிக்கு முன்கூட்டியே பாடநூல்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும்  பள்ளிகளைச் சென்றடைய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

    பாடநூல்களைக் கொண்டு சேர்க்கும் பணியில் முதன் முறையாக அஞ்சல் துறையும் ஈடுபடுத்தப்பட்டது. இந்த முறையில் பாடநூல்கள் பள்ளிகளைச் சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டதாக கல்வித் துறையினர் இடையே பரவலாக புகார் எழுந்தது.     இதன் காரணமாக, இந்த ஆண்டு பாடநூல்களை பழைய முறைப்படி கல்வித்  துறை அலுவலர்களைக் கொண்டே பள்ளிகளுக்குக் கொண்டு சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும் இந்தாண்டு சமச்சீர் கல்விப் பாடநூல்கள் வழங்கப்பட உள்ளது. இதற்கான பாடநூல்கள் தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் அச்சிடப்பட்டுள்ளன.

    பாடநூல்கள் முறையாக பள்ளிகளுக்கு கொண்டு சென்று மாணவர்களுக்கு  கிடைப்பதை உறுதிசெய்ய கடந்தாண்டு போல் இந்தாண்டும் பள்ளிக் கல்வி இணை இயக்குநர்கள் அளவில் கண்காணிப்புப் பணியை மேற்கொள்ள கல்வித் துறை திட்டமிட்டு வருகிறது.

     மதுரை, தேனி மாவட்டங்களில் 33 லட்சம் பாடநூல்கள் விநியோகம்:  மதுரை, தேனி மாவட்டங்களில் தமிழ்நாடு பாடநூல்கள் கழகம் மூலம் 33.88 லட்சம் இலவசப் பாடநூல்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளன. அதேபோன்று, விருதுநகர் மாவட்டத்தில் 11 லட்சம் பாடநூல்கள் பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. சில பாடங்களுக்குரிய பாடநூல்கள் மட்டும் இன்னும் வர வேண்டியுள்ளதாக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கல்வித் துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

   மதுரை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய, தொடக்க, நடுநிலைப் பள்ளிகள்  அளவில் 1-ம் வகுப்புக்கு 27,122 பாடநூல்களும், இரண்டாம் வகுப்புக்கு 26,251-ம், 3-ம் வகுப்புக்கு 26,494-ம், 4-ம் வகுப்புக்கு 30,432-ம், 5-ம் வகுப்புக்கு 16,252-ம், 6-ம் வகுப்புக்கு 16,196-ம், 7-ம் வகுப்புகளுக்கு 13,992-ம், 8-ம் வகுப்புக்கு 13,477 பாடநூல்களும் வழங்கப்பட உள்ளன மாவட்டத் தொடக்கக் கல்வித் துறையினர் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் கழகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியது:    தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலும் இலவச பாடநூல்களை வழங்குவதற்கான தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.    மாநிலத்தில் உள்ள பாடநூல் கழகத்தின் 22 கிட்டங்கிகளில் இருந்து பாடநூல்கள் 32 வருவாய் மாவட்டங்களில் உள்ள 65 கல்வி மாவட்ட அலுவலர்களுக்கும் அனுப்பட்டு வருகின்றன. தற்போது சுமார் 70 சதவீதம் அளவுக்கு பாடநூல்கள் அனுப்பப்பட்டு விட்டன. எஞ்சியுள்ள பாடநூல்களும் அனுப்பப்பட்டு வருகின்றன. மே 20-ம் தேதிக்குள் அனைத்து பாடநூல்களும் அனுப்பப்பட்டுவிடும். மே மாத இறுதிக்குள் பள்ளிகளைச் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதேபோன்று, சில்லறை வியாபாரிகள் பெறுவதற்காக சமச்சீர் பாடநூல்கள் 23.69 லட்சம் அச்சிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அவற்றை சில்லறை கடைக்காரர்கள் பெற்று விற்பனை செய்வார்கள். அதற்கான விலை நிர்ணயம் செய்து அளிக்கப்படும்.

    அதேபோன்று, மெட்ரிக் பள்ளிகளுக்காக 1.67 கோடி அளவுக்கு பாடநூல்கள்  அச்சிடப்பட உள்ளன. இதில், 60 சதவீதம் அளவுக்கு அச்சாகிவிட்டது. எஞ்சியவை விரைவில் அச்சிட்டு முடிக்கப்படும். புத்தகங்களுக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதுபற்றி பத்திரிகைகள் மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.