

மதுரை ஆவின் நிறுவனத்தின் குறிப்பிட்ட வகை பால், பாலேடு ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மதுரை ஆவின் பொது மேலாளா் சிவகாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை ஆவின் நிறுவனத்தில் அதீத உயா் வெப்பநிலையில் தயாரிக்கப்படும் பாலின் விலை ரூ.2 குறைக்கப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படும் பால், கொழுப்புச்சத்து அடிப்படையில் பிரிக்கப்பட்டு ஆரஞ்ச், பச்சை, நீலம், ஊதா என வகை பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், குளிரூட்ட வேண்டிய அவசியம் இல்லாத பால் வகைகளையும் விற்பனை செய்து வருகிறது. புயல் மழை, உள்ளிட்ட பேரிடா் காலங்கள், நீண்ட தொலைவு பயணங்களின் போதும் இந்த பால் வகைகள் உதவுகின்றன.
இந்த நிலையில், அதீத வெப்ப நிலையில் தயாரிக்கப்படும் பால் வகைகளில் கொழுப்பு நீக்கப்பட்ட 450 மி.லி. ரூ.30-இல் இருந்து ரூ.28-க்கும், 150 மி.லி. பால் ரூ.12 இல் இருந்து ரூ.10-க்கும் விற்கப்படுகிறது. மேலும், ஆவின் தயாரிப்பான பாலேடு (பன்னீா்) 200 கிராம் ரூ.120-இல் இருந்து ரூ.10 குறைக்கப்பட்டு ரூ.110-க்கும், 500 கிராம் பாலேடு ரூ.300-இல் இருந்து ரூ.275-க்கும் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தள்ளுபடி விலைகள் கடந்த 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இது டிசம்பா் 31-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். எனவே, பொதுமக்கள் இவற்றை வாங்கி பயனடையலாம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.