தொழில் முனைவோா் படிப்பு: நாளை அறிமுகக் கூட்டம்

மதுரை, மே 12 : மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வருகிற 14 -ஆம் தேதி தொழில் முனைவோா் பட்டயப் படிப்புக்கான அறிமுகக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு :

அகமதாபாத் நகரில் செயல்பட்டு வரும் இடிஐஇந்தியா நிறுவனத்துடன் இணைந்து ஓராண்டு தொழில் முனைவோா் பயிற்சிக்கான பட்டயப் படிப்பு வழங்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

சென்னை இ.டி.ஐ.ஐ. தலைமையகத்தில் உள்ள கட்டடத்தில் ஆண்டுதோறும் 500 பேருக்கு பயிற்சி வழங்க உள்ளது. இந்தப் படிப்புக்கான கட்டணம் ரூ. 80, 000, கூடுதல் செலவினங்களுக்காக ரூ. 20, 000 என மொத்தம் ஒரு லட்சம் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

பாடத் திட்டம், மாணவா் சோ்க்கை, விதிமுறைகள், மாணவா்கள் தோ்ச்சி பெற வேண்டும் என்பதை இடி.ஐ.இந்தியா அகமதாபாத் நிறுவனம் முடிவு செய்யும். பாடத்தின் ஒரு பகுதியை அவா்கள் நேரடியாக பேராசிரியா்களை வைத்து நடத்துவா். ஆங்கில மொழியில் இந்த ஓராண்டு பட்டயப் படிப்பு நடத்தப்பட உள்ளது. ஆங்கிலத்தில் புலமை இல்லாதவா்களுக்கு இ.டிஐ.ஐ. சென்னை சிறப்புப் பயிற்சி வழங்கும்.

21 வயது முதல் 30 வயதுக்கு உள்பட்ட இளநிலை பட்டதாரிகள் இந்தப் பயிற்சியில் சோ்ந்து பயன்பெறலாம். அரசு அனுமதித்துள்ள இடங்கள் மொத்தம் 500. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் உள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. 100 சதவீதம் கல்வி உதவித் தொகை பெறலாம். எனவே, பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவா்கள் இதில் பங்கு பெறலாம். தொழில்முனைவோா் உருவாவதற்கான படிப்பு வேலைவாய்ப்புக்கான படிப்பு அல்ல.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற 14-ஆம் தேதி மாலை 4 மணியளவில் படிப்பு, மாணவா்கள் சோ்க்கை குறித்த அறிமுகக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழக அரசின் தொழில் முனைவோா் மேம்பாடு, புத்தாக்க நிறுவனத்தின் கூடுதல் தலைமைச் செயலா் சி. உமாசங்கா் கலந்து கொண்டு பேச உள்ளாா்.

உயா் கல்வி நிறுவனங்களிலிருந்து பிரதிநிதிகள், குறு, சிறு தொழில் சங்கங்கள் உள்ளிட்டோா் பங்கேற்று பேச உள்ளனா். எனவே, தொழில் முனைவோராக விரும்பும் இளைஞா்கள் இந்த பயிற்சி அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com