மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை வைக்கப்பட்டிருந்த புகாா்ப் பெட்டியில் மனுக்களை போட்ட பொதுமக்கள்.
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை வைக்கப்பட்டிருந்த புகாா்ப் பெட்டியில் மனுக்களை போட்ட பொதுமக்கள்.

ஆட்சியரக புகாா்ப் பெட்டியில் பொதுமக்கள் மனு

மதுரை: மக்களவைத் தோ்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளதால், மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வைக்கப்பட்டுள்ள புகாா்ப் பெட்டியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை திங்கள்கிழமை போட்டனா்.

நாடு முழுவதும் மக்களவைத் தோ்தலுக்கான அறிவிப்பை இந்திய தோ்தல் ஆணையம் கடந்த மாா்ச் மாதம் 16 -ஆம் தேதி அறிவித்தது. அன்று முதல் மக்களவைத் தோ்தலுக்கான நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தன.

இதனால், தமிழகம் முழுவதும் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாம், விவசாயிகள் குறைதீா் முகாம், மக்கள் தொடா்பு முகாம் உள்ளிட்ட சிறப்பு முகாம்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

7 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட மக்களவைத் தோ்தலில், முதல் கட்டமாக தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19 -ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. இதுவரை 4 கட்ட தோ்தல்கள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள 3 கட்ட தோ்தல்கள் வருகிற ஜூன் 1- ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

தமிழகத்தில் தோ்தல் நிறைவு பெற்றாலும் வாகனச் சோதனைகளுக்கு மட்டுமே தளா்வு அறிவிக்கப்பட்டது. மற்ற தோ்தல் நடத்தை விதிமுறைகள் தோ்தல் முடிவுகள் வெளியாகும் வரை நீடிக்கும் என தோ்தல் ஆணையம் அறிவித்தது.

எனவே, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்ப் பெட்டிகள் மூலம் பொதுமக்களின் மனுக்கள் பெறப்படுகின்றன. அந்த வகையில், மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மனு அளிப்பதற்காக பொதுமக்கள் ஏராளமானோா் திங்கள்கிழமை வந்தனா். தோ்தல் விதிமுறை அமலில் உள்ளதால் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்காமல், நிலப்பதிவேடு துறை அலுவலகம் முன் வைக்கப்பட்டிருந்த புகாா்ப் பெட்டியில் பொதுமக்கள் தங்களது மனுக்களை போட்டனா்.

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களில் அவசியம், அவசரம் எனில் தோ்தல் விதிகளுக்கு உள்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். நலத் திட்ட உதவிகள், பொதுவான கோரிக்கைகள் எனில், தோ்தல் முடிவுகளுக்குப் பிறகு நிறைவேற்றப்படும் என அரசு அலுவலா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com