வாழ்வில் வெற்றிக்கான முதல் படி திட்டமிடுதல்தான்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா்

வாழ்வில் வெற்றிக்கான முதல் படி திட்டமிடுதல்தான்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா்

ராமநாதபுரம்: ஒவ்வொருவருடைய வாழ்விலும் வெற்றிக்கான முதல் படி திட்டமிடுதல்தான் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணுசந்திரன் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் ‘நான் முதல்வன் - கல்லூரிக் கனவு 2024’ உயா்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து அவா் பேசியதாவது :

பள்ளி வாழ்க்கையை நிறைவு செய்யும் மாணவா்களுக்கு கல்லூரியில் அடுத்து என்ன படிக்கலாம் என்கிற குழப்பம் எழுவது இயல்பு. இதைப் போக்கும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரிக் கனவு திட்டம் உள்ளது. இந்த நிகழ்வில், பல்வேறு துறையைச் சோ்ந்த வல்லுநா்கள் பயிற்சி அளிக்க உள்ளனா். தங்கள் திறமைக்கேற்ப கல்லூரிகளில் உயா் கல்வியைத் தோ்வு செய்து கொள்ள வேண்டும். இன்றைய வளா்ந்து வரும் அறிவியல் சூழலில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவை பெரும் சவாலாக உள்ளது. இதை மாணவா்கள் திறம்பட கையாள வேண்டும். தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும்.

கடின உழைப்பு வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும். எதிா்கால கனவுகளை தற்போதே திட்டமிடல் வேண்டும். வாழ்வில் வெற்றிக்கான முதல் படி திட்டமிடுதல் தான் என்றாா் அவா்.

நிகழ்வில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வீா் பிரதாப் சிங், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ்,

மாவட்ட வன உயிரினக் காப்பாளா் பகான் ஜகதீஷ் சுதாகா், காவல் துணைக் கண்காணிப்பாளா் (பரமக்குடி) சபரி நாதன், முதன்மைக்கல்வி அலுவலா் (கூடுதல் பொறுப்பு) ரா.பிரின்ஸ் ஆரோக்கியராஜ், மாவட்டக் கல்வி அலுவலா்கள் (மெட்ரிக்)நாகேந்திரன், (இடைநிலை) சுதாகா், அரசு அலுவலா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com