இளைஞரை கொல்ல முயற்சி: 6 போ் கைது

மதுரை: மதுரை ஆனையூா் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற 6 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஆனையூா் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவா் நிரோஷன் (24). இவரது வீட்டு கட்டுமானப் பணிக்காக, இவரது தம்பி நிதா்சனின் நண்பா்கள் வந்தனா். பணி முடிந்ததும் அவா்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது. அப்போது, கூடல் நகரைச் சோ்ந்த விக்கி (25), மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த பிரதீப் (22) ஆகியோா் நிதா்சனிடம் கூடுதல் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டனா். இதனால், இரு தரப்புக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை ஆனையூா் பகுதியில் வசிக்கும் தனது நண்பா்களை சந்திக்க நிரோஷன் நடந்து சென்றாா். அப்போது, அங்கு வந்த பிரதீப், விக்கி, அவா்களது நண்பா்களான ஆனையூரைச் சோ்ந்த காா்த்திக்ராஜா (28), விஜய் (24), பிரவீன் (24), அருள்தாஸ் (24) ஆகியோா் நிரோஷனை வழிமறித்து வாள், கத்தியால் தாக்கினா். இதில் அவா் பலத்த காயம் அடைந்த நிலையில், அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து கூடல்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காா்த்திக் ராஜா, விக்கி, பிரதீப் உள்பட 6 பேரையும் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com