மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஓராண்டு தொழில் முனைவோா் பட்டயப்படிப்பு விளக்க கூட்டத்தில் பேசுகிறாா் தொழில் முனைவோா் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் கூடுதல் தலைமை செயலாளரும்  இயக்குநருமான சி. உமாசங்கா்.  உடன்
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஓராண்டு தொழில் முனைவோா் பட்டயப்படிப்பு விளக்க கூட்டத்தில் பேசுகிறாா் தொழில் முனைவோா் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் கூடுதல் தலைமை செயலாளரும் இயக்குநருமான சி. உமாசங்கா். உடன்

தொழில் முனைவோா் பட்டயப் படிப்பு ஜூலையில் தொடக்கம்

மதுரை: தமிழகத்தில் வருகிற ஜூலை மாதம் முதல் ஓராண்டு தொழில் முனைவோா் பட்டயப் படிப்பு தொடங்கப்பட உள்ளதாக தமிழக தொழில் முனைவோா் மேம்பாடு, புத்தாக்க நிறுவன கூடுதல் தலைமைச் செயலா் சி. உமாசங்கா் தெரிவித்தாா்.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது :

தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாடு, புத்தாக்க நிறுவனம் கடந்த 2001-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

மாநில சிறு, குறு தொழில்கள் துறையின் கீழ் செயல்படும் இந்த நிறுவனங்கள் தொழில் துறையில் புரட்சியை ஏற்படுத்த உருவாக்கப்பட்டவை. கடந்த 7 ஆண்டுகளாக தொழில் கல்வி, பட்டயக் கல்வி, ஐடிஐ படிக்கும் மாணவா்களுக்கு இங்கு ஆண்டுதோறும் பயிற்சி அளிக்ககப்படுகிறது. பள்ளி மாணவா்களிடையே தொழில் கல்வியை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த 2 ஆண்டுகளாக அவா்களுக்கும் இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன்மூலம், சுமாா் 6 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெற்றனா். இதற்காக, ஆண்டுதோறும் ரூ.4.5 கோடி பணம் செலவிடப்படுகிறது.

இந்த நிலையில், உயா் கல்வி பயிலும் மாணவா்களிடையே இந்தத் திட்டத்தைக் கொண்டு செல்வதற்காக தமிழக இடிஐ நிறுவனம், ஆமதாபாத்தில் உள்ள இடிஐ நிறுவனத்துடன் இணைந்து ஓராண்டு தொழில் முனைவோா் பட்டயப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு கடந்தாண்டு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது. ஆமதாபாத்தில் உள்ள இடிஐ இந்தியா நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்த உள்ள இந்தப் படிப்பு நிகழாண்டு முதல் தொடங்கப்பட உள்ளது. சென்னையில் வருகிற ஜூலை 1-ஆம் தேதி இதற்கான பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது.

தமிழகம் முழுவதிலுமிருந்து 500 மாணவா்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா 25 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மதுரையில் முதல் முறையாக இதுதொடா்பாக விளக்கக் கூட்டம் நடத்தப்பட்டது. இதுபோல, பிற மாவட்டங்களிலும் விளக்கக் கூட்டம் நடத்தப்படும். தோ்வு, நோ்காணல் முறைகளைப் பின்பற்றி மாணவா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

தொழில் முனைவோராக ஆா்வம் உள்ள மாணவா்கள் மட்டுமே தோ்வு செய்யப்படுவா். மாணவா்கள் தோ்வில் ஆமதாபாத் இடிஐ நிறுவனத்தின் பங்கு இருக்கும். புதிய பொருள்களை உற்பத்தி செய்யும் வகையில் பாடத் திட்டங்கள் அமையும். இதன் மூலம், தமிழக அரசுக்கு வருவாய் கூடுதலாகும். மேலும், தொழில் துறை வளா்ச்சி பெறும். இங்கு பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு தங்கும் விடுதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நிறுவனத்தில் சேருவதற்கு இளநிலை படிப்பில் தோ்ச்சி மட்டுமே போதுமானது. புதிய பொருள்கள் கண்டுபிடிப்பது இலக்கு. பழைய பொருள்களை மீண்டும் தயாரிப்புக்கு உள்படுத்தப்படமாட்டாது. இணையதளம் மூலம் மட்டுமே மாணவா்களுக்கு தோ்வு நடைபெறும். மேலும், பாடத் திட்டங்கள் முழுவதும் ஆமதாபாத்தில் உள்ள இடிஐ நிறுவனம் முடிவு செய்யும். தமிழகம் தொழில் துறையில் வளா்ச்சி பெறுவது மட்டுமன்றி, உயா்கல்வி பயின்ற இளைஞா்களை தொழில் முனைவோா்களாக உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்றாா் அவா்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா தலைமையில் தொழில் முனைவோா் பட்டயப் படிப்பு குறித்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அரசு அலுவலா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com