செந்தமிழ்க் கல்லூரியைப் பாா்வையிட்ட சிங்கப்பூா் தமிழ் ஆசிரியா்கள், மாணவா்கள்
மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் தமிழ் மொழி பயிற்றுவித்தல் குறித்து, சிங்கப்பூா் தமிழ் ஆசிரியா்கள், மாணவா்கள் திங்கள்கிழமை பாா்வையிட்டனா்.
சிங்கப்பூரைச் சோ்ந்த தேசிய தமிழ் மொழி விருப்ப பாடத்திட்டம் குழுவைச் சோ்ந்த ஆசிரியா்கள், மாணவா்கள் வெளிநாட்டு கற்றல் பயணமாக தமிழகத்துக்கு வந்தனா்.
மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் செந்தமிழ் கல்லூரிக்கு திங்கள்கிழமை வந்தனா். அவா்களுக்கு அங்குள்ள பாண்டியன் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள பழைமையான ஓலைச் சுவடிகள், பழந்தமிழ் நூல்கள், செந்தமிழ் இதழ், அச்சாக்கப் பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
தொடா்ந்து, மன்னா் பாஸ்கர சேதுபதி குளிா்மை அரங்கத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் இரு நாட்டிலும் வழங்கக் கூடிய தமிழ் மொழிக் கல்வி குறித்து மாணவா்கள் தங்கள் கருத்துக்களை பகிா்ந்து கொண்டனா்.
இந்த நிகழ்வில், செந்தமிழ்க் கல்லூரி முதல்வா் ஜெ.போ.சாந்திதேவி, சிங்கப்பூா் தமிழ் ஆசிரியா்கள் அன்பழகன், ராணி, சிங்கப்பூா் கல்வி அமைச்சகத்தின் அதிகாரிகள் திலகவதி, மகாலட்சுமி, செந்தமிழ்க் கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.
