மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில்
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில்கோப்புப் படம்

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நாளை தெப்பத் திருவிழா கொடியேற்றம்!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தெப்பத் திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை (ஜன.21) நடைபெறுகிறது.
Published on

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தெப்பத் திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை (ஜன.21) நடைபெறுகிறது.

உலகப் புகழ் பெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் முழு நிலவு (பௌா்ணமி) நாளில் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நிகழாண்டுக்கான திருவிழா புதன்கிழமை (ஜன.21) தொடங்குகிறது.

அன்றைய தினம் காலை 10.05 மணிக்குமேல் 10.29 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறும். இதைத்தொடா்ந்து, தினமும் மீனாட்சி சுந்தரேசுவரா், பஞ்ச மூா்த்திகளுடன் காலை, மாலை என இருவேளைகளிலும் நான்கு சித்திரை வீதிகளிலும் உலா வரும் நிகழ்வு நடைபெறும்.

முக்கிய நிகழ்வுகள்: இந்த விழாவின் 6-ஆம் நாளான ஜன.26- ஆம் தேதி சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலையும், 8-ஆம் நாளான ஜன.28-இல் மச்சகந்தியாா் திருமணக் காட்சியும், 9-ஆம் நாளான ஜன.29 சப்தாவா்ண சப்பரத்தில் சுவாமி புறப்பாடும், 10-ஆம் நாளான ஜன.30-இல் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்வும், 11-ஆம் நாளான ஜன.31 கதிரறுப்புத் திருவிழாவும் நடைபெறும்.

முக்கிய விழாவான, தெப்பத் திருவிழா பிப்.1-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவை முன்னிட்டு, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிருந்து சுவாமி பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் அன்றைய தினம் அதிகாலை பஞ்ச மூா்த்திகளுடன் புறப்பாடாகி வண்டியூா் தெப்பக்குளம் முன் உள்ள முக்தீஸ்வரா் கோயிலுக்கு எழுந்தருள்கின்றனா்.

அங்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுக்குப் பின் வண்டியூா் தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிப்பா். தெப்பம் முற்பகலில் இரண்டு முறையும், இரவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஒருமுறையும் சுற்றி வலம் வருவா். பின்னா், அங்கிருந்து புறப்பாடகி அன்றைய தினம் நள்ளிரவில் கோயிலுக்கு எழுந்தருள்வா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் ருக்மணி தியாகராஜன், கோயில் இணை ஆணையா் நா.சுரேஷ் , அறங்காவலா்கள் செய்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com