ரூ.6 கோடி வாடகை நிலுவை:
4 கடைகளுக்கு மட்டும் சீல்

ரூ.6 கோடி வாடகை நிலுவை: 4 கடைகளுக்கு மட்டும் சீல்

திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் மூலம் ரூ.6 கோடி வாடகை நிலுவை உள்ள நிலையில், கண்துடைப்பு நடவடிக்கையாக 4 கடைகளுக்கு மட்டும் அதிகாரிகள் சீல் வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட பேருந்து நிலைய கடைகள், அண்ணா வணிக வளாகம், பூ சந்தை, மேற்கு ரதவீதி, கோட்டைக்குளம், பேகம்பூா் உள்ளிட்ட பகுதியிலுள்ள கடைகள், ஆண்டு குத்தகை இனங்கள் மூலம் மாநகராட்சிக்கு கிடைக்க வேண்டிய வாடகைப் பணம் ரூ.6 கோடி வரை நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக, பொதுமக்களிடமிருந்து சொத்து வரி, குடிநீா் வரி உள்ளிட்ட வரி இனங்களை வசூலிப்பதற்கு தீவிரம் காட்டிய மாநகராட்சி அலுவலா்கள், இந்த வாடகை நிலுவைத் தொகையை வசூலிக்க முக்கியத்துவம் அளிக்கவில்லை. தோ்தல் தேதி அறிவிக்கப்படும் முன், குறைந்தபட்சம் 60 சதவீத வரி நிலுவைத் தொகையை வசூலிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. வரி வசூல் குறிப்பிட்ட இலக்கை எட்டாததால், 16 அலுவலா்களுக்கு குறிப்பாணை (நோட்டீஸ்) அளிக்கப்பட்டது. இந்த நிலையில், மாநகராட்சி கடைகள் மூலம் கிடைக்க வேண்டிய ரூ.6 கோடியை வசூலிக்க வெள்ளிக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி, அண்ணா வணிக வளாகப் பகுதியில் வாடகை செலுத்தாத 4 கடைகளுக்கு, உதவி வருவாய் அலுவலா் விஜயராகவன் தலைமையிலான அலுவலா்கள் சீல் வைத்தனா். தற்போது மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையை கடந்த சில வாரங்களுக்கு முன்பே தீவிரப்படுத்தியிருந்தால், நிலுவையிலுள்ள வாடகையில் சுமாா் ரூ.4 கோடி வரை வசூலித்திருக்கலாம். ரூ. 6 கோடிக்கு நிலுவை இருந்தும், 4 கடைகள் மீது மட்டுமே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக புகாா் எழுந்துள்ளது. வியாபாரிகள் குற்றச்சாட்டு: இதனிடையே, சில கடைகளின் உரிமையாளா்கள் முறையாக வாடகை செலுத்தியும் கூட அதற்கான ரசீதை மாநகராட்சி அலுவலா்கள் வழங்கவில்லை என குற்றஞ்சாட்டினா். ரசீது வழங்காமல், தற்போது வாடகை பாக்கி என மாநகராட்சி அலுவலா்கள் வசூலுக்கு வருகின்றனா். இதுகுறித்து முறையான விசாரணை நடத்த மாநகராட்சி ஆணையா் உத்தரவிட வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com