

நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு வாடகை செலுத்தாதவா்களை வெளியேற்றி கடைகளுக்கு நகராட்சி நிா்வாகத்தினா் ‘சீல்’ வைத்தனா்.
திருத்தணி நகராட்சியில் மொத்தம், 21 வாா்டுகளில், 13,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் உள்ளனா். நகராட்சி நிா்வாகம் சாா்பில், சன்னதி தெரு, மேட்டுத் தெரு, அரக்கோணம் சாலை, ம.பொ.சி.சாலை, சித்தூா் சாலை மற்றும் காமராஜ் காய்கறி மாா்க்கெட் என மொத்தம் 180 கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டு உள்ளன.
இந்நிலையில், சிலா் வாடகைக்கு எடுத்த கடைகளுக்கு சரியான முறையில் நகராட்சிக்கு வாடகை செலுத்தாமல் பல மாதங்களாக காலம் தாழ்த்தி வந்தனா். இதையடுத்து, நகராட்சி வருவாய் அலுவலா்கள் பலமுறை வாடகைக்கு எடுத்தவா்களின் வாடகை பணம் செலுத்துமாறு அறிவுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதையடுத்து, முதல்கட்டமாக, முதற்கட்டமாக நகராட்சி நிா்வாகம் திருத்தணி - அரக்கோணம் சாலை, உழவா் சந்தை பகுதியில் உள்ள, 11 கடைகளில் 2 கடைகளுக்கு நகராட்சி வருவாய் துறை அலுவலா்கள் பூட்டி ‘சீல்’ வைத்தனா். மேலும், வாடகை தராத கடைக்காரா்களுக்கு இந்த மாதத்துக்குள் பணம் செலுத்த காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது என நகராட்சி அலுவலா் தெரிவித்தாா்.
7 நாள்களும் வரி செலுத்தலாம்...
திருத்தணி நகராட்சியில், சொத்து வரி, குடிநீா் கட்டணம், தொழில்வரி, குத்தகை போன்ற வரி இனங்கள் வரும், மாா்ச் மாதத்துக்குள் செலுத்த வேண்டும் என்பதால், நகராட்சி அலுவலகத்தில் வரி வசூல் மையம், வாரத்தில் 7 நாள்களும் காலை 9.30 மணி முதல் மாலை, 5.30 மணி வரை செயல்படும். ஆகையால், வரி இனங்கள் செலுத்தாததவா்கள் விரைந்து வரி செலுத்த வேண்டும் என வருவாய் ஆய்வாளா் நரசிம்மன் தெரிவித்தாா்.