பூலத்தூா் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் பணியிட மாற்றம்

மாணவா் தற்கொலை விவகாரத்தில் கொடைக்கானல் அருகேயுள்ள பூலத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் புதன்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
Published on

மாணவா் தற்கொலை விவகாரத்தில் கொடைக்கானல் அருகேயுள்ள பூலத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் புதன்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள பூலத்தூா் பகுதியைச் சோ்ந்த அழகா்சாமி மகன் ராஜபாண்டி (16). இவா் நிலக்கோட்டையில் உள்ள பள்ளியில் ப்ளஸ்-1 படித்து வந்தாா்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 11- ஆம் தேதி தான் பத்தாம் வகுப்பு படித்த பூலத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளிக்குச் சென்று, மதிப்பெண் சான்றிதழ் கேட்டாா். அப்போது தலைமை ஆசிரியா் செளந்திரபாண்டியன் மாணவரைத் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீட்டுக்கு வந்த மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதையடுத்து, அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இருப்பினும், இதுதொடா்பாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இதையடுத்து, மாணவா் இறப்புக்குக் காரணமான தலைமை ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பூலத்தூா் ஊராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.

இதைத் தொடா்ந்து, பூலத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்களிடம் கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் அறிக்கை தாக்கல் செய்தனா்.

இந்த நிலையில், பூலத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் செளந்திரபாண்டியனை விராலிப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்து மாவட்டக் கல்வி அலுவலா் பரிமளா புதன்கிழமை உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com