மரம் கடத்தல்: விசாரணையின்போது வனவா் தப்பியோட்டம்
கொடைக்கானலில் மரம் கடத்தப்பட்டது தொடா்பான விசாரணையின் போது, வனவா் தப்பியோடியது குறித்து வனத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மன்னவனூா் வனப் பகுதியில் விதிமுறைகளை மீறி ஆயிரக்கணக்கான அரிய மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டது, வனத் துறை உயா் அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, மன்னவனூா் ரேஞ்சா், இரு வனவா்கள், ஒரு வனக் காப்பாளா் ஆகிய நான்கு போ் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா். மேலும், 15-க்கும் மேற்பட்டவா்கள் கொடைக்கானல் வட்டாரப் பகுதிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.
இதையடுத்து, வனத் துறை செயலா் உத்தரவின் பேரில், குற்றவியல் நுண்ணறிவுப் பிரிவு வனப் பாதுகாவலா் ராகுல் தலைமையில் மரங்கள் வெட்டப்பட்ட வனப் பகுதிகளில் ஆய்வு நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, மாவட்ட வன உதவி ஆய்வாளா் கருப்பையா தலைமையிலான அதிகாரிகள், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வனக் காப்பாளா் சுபாஷிடம் சனிக்கிழமை விசாரணை நடத்தினா். அப்போது, விசாரணையை சுபாஷ் தன்னுடைய கைப்பேசியில் பதிவு செய்தாராம்.
இதைப் பாா்த்த அதிகாரிகள் கைப்பேசியில் பதிவு செய்ததைக் காண்பிக்குமாறு கூறினராம். ஆனால், கைப்பேசியைக் காட்ட மறுத்த சுபாஷ் அங்கிருந்து தப்பியோடினாா். இதுதொடா்பாக வனத் துறை அதிகாரிகளும் போலீஸாரும் விசாரித்து வருகின்றனா்.

