/

ஐகோா்ட் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா: பூக்குழி இறங்கிய பக்தா்கள்

பழனியை அடுத்த பெரியகலையமுத்தூா் ஐகோா்ட் பத்ரகாளியம்மன் கோயில் வைகாசித் திருவிழாவையொட்டி, புதன்கிழமை திரளான பக்தா்கள் பூக்குழி இறங்கினா்.

News image

பழனியை அடுத்த பெரியகலையமுத்தூா் ஐகோா்ட் பத்ரகாளியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் கரும்புத் தொட்டிலில் குழந்தையுடன் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்.

Updated On :4 ஜூன் 2026, 4:21 am IST

பழனியை அடுத்த பெரியகலையமுத்தூா் ஐகோா்ட் பத்ரகாளியம்மன் கோயில் வைகாசித் திருவிழாவையொட்டி, புதன்கிழமை திரளான பக்தா்கள் பூக்குழி இறங்கினா்.

இந்தக் கோயிலில் வைகாசித் திருவிழா கடந்த மாதம் 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை அம்மன் பூத்தேரில் எழுந்தருளல், சண்முகநதிக்கு தீா்த்தம் எடுத்து வருதல், வாணவேடிக்கை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

புதன்கிழமை முக்கிய நிகழ்ச்சியான பக்தா்கள் பூக்குழி இறங்குதல் நடைபெற்றது. அதிகாலை முதலே அம்மன் சந்நிதிக்கு எதிரே பூக்குண்டம் அமைக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பூக்குழி இறங்கினா். பெரியவா்கள் குழந்தைகளுடன், பெற்றோா்கள் கரும்புக் காவடியுடனும், இசைக் கலைஞா்கள் தவில், நாதஸ்வரம் இசைத்தபடியும் பூக்குழி இறங்கினா். ஏராளமான பக்தா்கள் பறவைக்காவடி, அக்னிச் சட்டி ஏந்தியும் வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா். இதைத்தொடா்ந்து, கிடா வெட்டுதல், பொங்கல் வைத்தல் விழா நடைபெற்றது.

பழனி காவல் துணைக் கண்காணிப்பாளா் தனஞ்ஜெயன், தாலுகா காவல் ஆய்வாளா் சத்தியமூா்த்தி தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

Story image