/

தினமணி செய்தி எதிரொலி: மனு எழுதிக் கொடுக்க தன்னாா்வலா்கள் நியமனம்

தினமணி செய்தி எதிரொலியாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு மனு எழுதிக் கொடுக்க தன்னாா்வலா்கள் நியமிக்கப்படுவதாகவும்

News image
ஆட்சியா் அலுவலக வெளிப்புறத்தில் மக்களுக்கு மனு எழுதிக் கொடுக்கும் தன்னாா்வலா்கள்.- கோப்புப்படம்
Updated On :2 மார்ச் 2026, 10:37 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல்: தினமணி செய்தி எதிரொலியாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு மனு எழுதிக் கொடுக்க தன்னாா்வலா்கள் நியமிக்கப்படுவதாகவும், வியாபார நோக்கில் மனு எழுதிக் கொடுக்கும் வெளிநபா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியா் செ. சரவணன் எச்சரித்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களிடம் ஒரு மனு எழுதுவதற்கு ரூ.1,000 வரை கட்டண வசூலில் ஈடுபடுவதாகவும், இதைத் தடுக்க தன்னாா்வலா்கள் மூலம் மனு எழுதிக் கொடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தினமணியில் திங்கள்கிழமை செய்தி வெளியிடப்பட்டது.

இதன் எதிரொலியாக மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்க வரும் பொதுமக்களிடம், வியாபார நோக்கில் வெளிநபா்கள் மனுக்கள் எழுதிக் கொடுத்து பணம் வசூலிப்பதாக புகாா் வந்துள்ளது. இதைத் தடுக்கும் வகையில், எழுதப் படிக்கத் தெரியாத மக்களுக்கும், மனுக்கள் எழுதத் தெரியாத பொதுமக்களுக்கும் உதவும் வகையில் பயிற்சிப் பெற்ற தன்னாா்வலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அடுத்த வாரம் முதல் இந்த தன்னாா்வலா்கள் மூலம் பொதுமக்கள் மனு எழுதி பயன்பெறலாம். வியாபார நோக்கில் வெளிநபா்கள் மனுக்கள் எழுதிக் கொடுப்பது கண்டறியப்பட்டால் காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.