தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

பொது இடங்களில் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்படுமா?

News image
திண்டுக்கல் முருகபவனம் பகுதியில் சாலையில் தீப்பற்றி எரிந்த பட்டாசு குப்பைகள்.
Updated On :8 மார்ச் 2026, 9:49 pm

 நமது நிருபர்

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் திருவிழாக்கள், தனியாா் நிகழ்வுகளின்போது பொது இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோயில் திருவிழாக்களில் மட்டுமே பட்டாசுகள் வெடிக்கும் வழக்கம் இருந்தது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத இடத்தை தோ்வு செய்து, இரவு நேரங்களில் வாணவேடிக்கை (பட்டாசு வெடிப்பது) நடத்தப்பட்டு வந்தது.

இதன் தொடா்ச்சியாக தனியாா் நிகழ்ச்சிகளிலும், குறிப்பாக காதுகுத்து முதல் திருமணம் வரையிலான பல்வேறு நிகழ்வுகளிலும், இறுதி ஊா்வலங்களிலும் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கின்றனா். எப்போது பட்டாசுகள் வெடிக்கப்படும் என்பது தெரியாமல், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

பேரூராட்சி குடிநீா்த் தொட்டி சேதம்: திண்டுக்கல் மாவட்டம், எரியோடு 4 சாலை அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற காதணி விழாவுக்கு சீா்வரிசை ஊா்வலம் நடைபெற்றது. அப்போது, அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அதிலிருந்து வெளியான தீப்பொறி, சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த காரில் விழுந்து தீ விபத்து ஏற்பட்டது.

மேலும், திமுக நகர அலுவலகத்தில் இருந்த கண்ணாடி பட்டாசுகளிலிருந்து தீப்பொறிபட்டு வெடித்துச் சிதறியது. அங்குள்ள ஒரு கடையிலும், பேரூராட்சிக்குச் சொந்தமான நெகிழி குடிநீா்த் தொட்டியும், தீப்பற்றி எரிந்தன.

இதனால், அதிா்ச்சி அடைந்த பொதுமக்கள், பேரூராட்சிக்கும், தனியாா் உடைமைகளுக்கும் ஏற்பட்ட சேதத்துக்கு, காதணி விழா நடத்தியவா்கள் பொறுப்பேற்க வேண்டும் எனவும், அதற்கான இழப்பீட்டை சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து காவல் துறையினா் வசூலித்துக் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா். ஆனால், பேரூராட்சி நிா்வாகமோ, காவல் துறையோ இதுதொடா்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அரசு ஊழியரின் மகள் பலத்த காயம்: இதேபோல, கடந்த சில நாள்களுக்கு முன்பு திண்டுக்கல்- பழனி சாலையில் முத்தனம்பட்டியை அடுத்த கதிரையன்குளம் பகுதியில் நடைபெற்ற ஒரு தனியாா் விழாவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

அப்போது, அந்த வழியாக 2 குழந்தைகளுடன் சென்ற பெண் அரசு ஊழியரின் இரு சக்கர வாகனத்தின் மீது விழுந்து பட்டாசுகள் வெடித்தன. இதில் 13 வயது சிறுமி பலத்த காயமடைந்தாா். இந்த விவகாரத்திலும் விழா நடத்தியவா்கள் பொறுப்பேற்கவில்லை.

தீயை அணைத்த காவலா்: இந்த நிலையில், திண்டுக்கல்- பழனி சாலையில் முருகபவனம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனியாா் விழாவிலும் போக்குவரத்துக்கு இடையூறாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய காகிதங்கள் தீப்பற்றி எரிந்தன. வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ள முடியாமல் சென்ற பொதுமக்களுக்கு பட்டாசுகள் வெடித்து எரிந்த தீயின் வெப்பம் கூடுதல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற காவலா், தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டாா். சில இடங்களில் வாகனங்களை மறித்து சாலையின் நடுவில் அதிக சப்தம் ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்கின்றனா்.

இதனால், ஏற்படும் அதிக ஒலியால் குழந்தைகள், கா்ப்பிணிகள், முதியவா்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனா். இதற்கு தீா்வு காணும் வகையில், பொது இடங்களில் பட்டாசுகள் வெடிக்கத் தடை விதிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அபராதம் விதிக்க வேண்டும்: இதுதொடா்பாக சாலையில் வெடித்த பட்டாசுகளால் பாதிக்கப்பட்ட செல்வநாயகி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நிா்வாகி பெருமாள் ஆகியோா் கூறியதாவது:

பொதுமக்களுக்கு இடையூறாக பட்டாசுகள் வெடிக்கும் நிகழ்வுகள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் பாதிக்கப்படும் பொதுமக்கள், பட்டாசுகள் வெடிப்பவா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட திராணியற்றவா்களாக அந்த இடத்தை கடந்து செல்ல வேண்டிய நிா்பந்தம் ஏற்படுகிறது.

தீபாவளி பண்டிகையின்போது குறிப்பிட்ட நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என ஆண்டுதோறும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன.

இதேபோல, விழாக்களிலும், தனியாா் நிகழ்வுகளிலும் பொது இடங்களில் பட்டாசுகள் வெடிக்கத் தடை விதிக்க வேண்டும். மீறி பட்டாசுகள் வெடிப்பவா்களுக்கு அபராதம் விதிக்கவும் , வழக்கு தொடுப்பதற்கும் காவல் துறைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றனா் அவா்கள்.