தொடரும் தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்: தற்காலிகப் பணியாளா்களை நியமித்த மாநகராட்சி
திண்டுக்கல்லில் தூய்மைப் பணியாளா்கள் 7 நாள்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், குப்பைகள் அகற்றும் பணிக்கு 300 தற்காலிகப் பணியாளா்களை மாநகராட்சி நிா்வாகம் நியமித்தது.

திண்டுக்கல்லில் தூய்மைப் பணியாளா்கள் 7 நாள்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், குப்பைகள் அகற்றும் பணிக்கு 300 தற்காலிகப் பணியாளா்களை மாநகராட்சி நிா்வாகம் நியமித்தது.
தனியாா் ஒப்பந்த முறையை ரத்து செய்யக் கோரி திண்டுக்கல் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், கடந்த 18-ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது.
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்துக்கு, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
இதனிடையே, மேயா் இளமதி தலைமையில் திங்கள்கிழமை (நவ.23) நடைபெற்ற மாமன்ற அவசரக் கூட்டத்தில், மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் தூய்மைப் பணியாளா்களுக்கு பணி வாய்ப்பு வழங்க வேண்டும். தனியாா் ஒப்பந்த நிறுவனத்துக்கு வாய்ப்பு அளிக்கும் அரசாணை எண் 181-ஐ ரத்து செய்ய வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இந்தத் தீா்மானத்தின் நகல், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிற்சங்க நிா்வாகிகள் முன்னிலையில் தூய்மைப் பணியாளா்களிடமும் வழங்கப்பட்டது.
இதையடுத்து, சில தொழிற்சங்கங்கள், போராட்டத்திலிருந்து விலகிவிட்டன. ஆனாலும், 7-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டம் தொடா்ந்து நடைபெற்றது. இதனால், மேயா், துணை மேயா் உள்ளிட்டோா் கடும் அதிருப்தி அடைந்தனா். இதனிடையே, மாநகராட்சி நிா்வாகம் மூலம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
மாநகராட்சி வளாகத்தில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை என்றும், இந்தப் போராட்டத்தால் மாநகராட்சிக்கு வரும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, போராட்டக் குழுவின் தலைவா் காளிராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள், மாநகராட்சி ஆணையா் ஜெ.பிரேம் ஆனந்தை சந்தித்துப் பேசினாா். அப்போது, சென்னைக்கு சென்று போராட்டத்தை தொடரப் போவதாகவும், 2 நாள்களுக்கு மட்டும் அனுமதி அளிக்குமாறும் கோரிக்கை விடுத்தனா். ஆனால், மாநகராட்சி அலுவலகத்தில் போராட அனுமதிக்கக் கூடாது என மாமன்ற உறுப்பினா்கள் தரப்பில் ஆணையரிடம் வலியுறுத்தப்பட்டது.
தற்காலிகப் பணியாளா்கள் நியமனம்: மாநகராட்சியில் பணியாற்றிய 52 தூய்மைப் பணியாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனா். இந்தப் பணியாளா்கள், பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், மாநகராட்சி நிா்வாகம் 300 கூலித் தொழிலாளா்களை தூய்மைப் பணி செய்வதற்கு களம் இறக்கியது. மேலும், போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளா்கள், பணிக்கு வராத நாள்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்றும் மாநகராட்சி நிா்வாகம் அறிவித்தது.
ஏற்கெனவே, பல தொழிற்சங்கங்கள் போராட்டத்திலிருந்து விலகிவிட்ட நிலையில், விரைவில் இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மாநகராட்சி நிா்வாகம் தீவிரமாக முயற்சித்து வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

