திருச்சி விமானநிலையத்தில் கைது செய்யப்பட்ட சுங்கத்துறை அதிகாரிகள் 6 பேர் சிபிஐ விசாரணைக்குப் பிறகு வியாழக்கிழமை மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருச்சி விமானநிலையத்தில் தங்கம் கடத்தியது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் நடைபெற்ற தொடர் சோதனையில் சுங்கத்துறை உதவி ஆணையர் வெங்கடேசலு, சுங்கத்துறை கண்காணிப்பாளர்கள் கலுகாசலமூர்த்தி, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 19 பேர் ஆகஸ்ட் 7-ஆம் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கணேசன் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சுங்கத்துறை அதிகாரிகளான வெங்கேடசலு, கலுகாசலமூர்த்தி, ராமகிருஷ்ணன் மற்றும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த தமயந்தி, தேவகுமார், முத்துக்குமார் ஆகிய 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி, சுங்கத்துறை அதிகாரிகள் 6 பேரையும் ஆக. 16-ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகளுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 6 பேரையும் சிபிஐ அதிகாரிகள் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நீதிமன்ற கெடு முடிவடைந்ததை அடுத்து, அவர்கள் 6 பேரும் சிபிஐ நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை மீண்டும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர்கள் 6 பேரும் மதுரை மத்தியச்சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.