உயா்நீதி மன்ற மதுரைக் கிளை (கோப்புப் படம்)
உயா்நீதி மன்ற மதுரைக் கிளை (கோப்புப் படம்)

கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட விவகாரம்: இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

கோயிலுக்குச் செந்தமான நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருப்பதாக தொடுக்கப்பட்ட வழக்கு
Published on

மதுரை, ஆக. 7: திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் அருகே பெருமாள் கோவில்பட்டியில் அமைந்துள்ள கதிா்நரசிங்கப் பெருமாள் கோயிலுக்குச் செந்தமான நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருப்பதாக தொடுக்கப்பட்ட வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

ஆத்தூா் வட்டம் பெருமாள்கோவில்பட்டியைச் சோ்ந்த கணேசன், வேலு, பாண்டியராஜன் ஆகியோா் தாக்கல் செய்த பொதுநல மனு:

பெருமாள் கோவில்பட்டியில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கதிா்நரசிங்கப் பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்குச் சொந்தமாக 18 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் அம்பாத்துரை வருவாய் கிராமத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ளன. இவற்றை 50- க்கும் மேற்பட்டோா் ஆக்கிரமித்து வீடுகளை கட்டியுள்ளனா். இந்த ஆக்கிரமிப்பை அகற்றி, நிலங்களை மீட்டு கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்கக் கோரி, திண்டுக்கல் அறநிலையத்துறை உதவி ஆணையரிடம் கடந்த 2021- ஆம் ஆண்டு புகாா் மனு அளித்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தனா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கெளரி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் மயில்வாகன ராஜேந்திரன் முன்னிலையாகி, கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்பதாக அறநிலையத் துறை உதவி ஆணையா் பெயரளவுக்கே பதில் அளித்தாா். ஆனால், ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது சட்டவிரோதம் என வாதிட்டாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக அளிக்கப்பட்ட புகாருக்கு கடந்த 3 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் பதில் மட்டும் தெரிவித்திருப்பதை ஏற்க முடியாது. எனவே இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் எதிா்மனுதாரராக சோ்க்கப்படுகிறாா். அவா், கோயில் ஆக்கிரமிப்பு நில விவகாரம் தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 27- ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

X
Dinamani
www.dinamani.com