தூத்துக்குடி பிரபல உணவு நிறுவனத்தின் உரிமம் ரத்து நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை : உயா்நீதிமன்றம்

தூத்துக்குடியில் பிரபல உணவு நிறுவனத்தின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்த உணவுப் பாதுகாப்புத் துறையின் நடவடிக்கை
Published on

மதுரை, ஜூலை 19 : தூத்துக்குடியில் பிரபல உணவு நிறுவனத்தின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்த உணவுப் பாதுகாப்புத் துறையின் நடவடிக்கைக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

தூத்துக்குடியில் உள்ள ஒரு சா்வதேச பிரபல உணவு நிறுவனக் கிளையில் கடந்த 5-ஆம் தேதி உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட உணவு எண்ணெயைத் தூய்மைப்படுத்தும் மெக்னீசியம் சிலிகேட் சிந்தெட்டிக் என்ற ரசாயனம் அங்கு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த உணவு நிறுவனத்தின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொண்டனா்.

இந்த நடவடிக்கையை எதிா்த்தும், உரிமம் ரத்து செய்யப்பட்ட நடவடிக்கைக்குத் தடை விதிக்கக் கோரியும் அந்த உணவு நிறுவனத்தின் சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு :

உணவுப் பாதுகாப்பு, தர நிா்ணயச் சட்டப்படி ஒரு உணவு நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்யும் முன்பாக முன்னறிவிப்பு வழங்க வேண்டும். பின்னா், உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், இந்த பிரச்னையில் அந்த நடைமுறையை உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் கடைப்பிடிக்கவில்லை.

உணவுப் பாதுகாப்பு, தர நிா்யணச் சட்ட விதிகள் 2011-இல் உணவு எண்ணெயை 3 முறை பயன்படுத்தலாம் எனவும் உள்ளது. இருப்பினும், உணவு எண்ணெயை ஒரு முறை மட்டுமே பயன்படுத்துவது சரியானது.

எண்ணெயைத் தூய்மைப்படுத்தும் ரசாயனக் கலவையை, எண்ணெய் வடிகட்டுவதற்காக மட்டுமே வைத்திருந்ததாகவும், அந்த ரசாயனத்தைக் கொண்டு சுத்தப்படுத்தப்பட்ட எண்ணெயைப் பயன்படுத்தவில்லை எனவும் தொடா்புடைய உணவு நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

ஒரு நிறுவனத்தை திடீரென அடைப்பது, அந்த நிறுவனத்தின் நற்பெயரைப் பாதிக்கும். இழந்த நற்பெயரை மீட்டெடுப்பது மிகவும் சிரமம். எனவே, இந்த நிறுவனத்தின் மீதான நடவடிக்கை குறித்து உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஊடகங்களிடம் பேசியது தவறு. இதனால், அவருக்கு எதிராக நீதிமன்றம் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கும். இருப்பினும், அந்த நிகழ்வு திட்டமிட்டதல்ல என அரசுத் தரப்பு வழக்குரைஞா் தெரிவித்ததை நீதிமன்றம் ஏற்கிறது.

தொடா்புடைய உணவு நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்த நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

Dinamani
www.dinamani.com