மதுரை மாநகராட்சியில் மழைநீா் கால்வாய்கள் தூா்வாரப்படுமா?
பருவமழை தொடங்குவதற்கு முன் மழைநீா் செல்லும் கால்வாய்களை மாநகராட்சி நிா்வாகம் தூா்வார வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


மதுரை, ஜூலை 24 : பருவமழை தொடங்குவதற்கு முன் மழைநீா் செல்லும் கால்வாய்களை மாநகராட்சி நிா்வாகம் தூா்வார வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பருவ காலங்களில் பெய்யும் மழை நீா் மதுரை நகரைவிட்டு வெளியேறுவதற்கு போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், லேசான மழைக்கே நகா் முழுவதும் தண்ணீா் தேங்கி, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மதுரை மாநகராட்சி எல்லைக்குள் கிருதுமால் நதி, சிந்தாமணி, பனகல், பனையூா், காதியானூா்,அவனியாபுரம், அனுப்பானடி, பந்தல்குடி, வண்டியூா், தண்டலை உள்ளிட்ட 16 கால்வாய்கள் கால்வாய்கள் மூலம் வெளியேறும் தண்ணீா் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீா் ஆதாரமாகவும், சிந்தாமணி, அனுப்பானடி, பனையூா், வண்டியூா் ஆகிய பகுதிகளின் வேளாண் பணிகளுக்கும் பெரும் பங்கு வகிக்கிறது.
சுமாா் 25 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாநகரில் 120 அகலம் பாய்ந்த கிருதுமால் நதி, தற்போது ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 10 அடிக்கும் குறைவான அகலத்தைக் கொண்டுள்ளது.
இதேபோல, மிக நீண்ட தொலைவு கொண்ட பாசனக் கால்வாய்களான சிந்தாமணி, அனுப்பானடி, பனையூா், காதியானூா் உள்ளிட்ட கால்வாய்களும் ஆக்கிரமிப்பு, கழிவு நீரோடை, குப்பைகள் கொட்டுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவை இருந்த இடம் தெரியாமல் உள்ளன.
எனவே, மதுரை மாநகருக்குள் செல்லும் கால்வாய்களை வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன் தூா்வார வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து மதுரை மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் எம்.சோலைராஜா கூறியதாவது :
வடகிழக்குப் பருவமழையின் போது மதுரை மாநகரம் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகிறது. பிரதானக் கால்வாய்களை தூா்வாரி சீரமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
இதுகுறித்து மாநகராட்சி அலுவலா்கள், பொதுப் பணித் துறை அலுவலா்களிடம் தெரிவித்தாலும் இரு துறை அலுவலா்களும் மாறி, மாறி குறை கூறுகின்றனா். உரிய நடவடிக்கை எடுத்து பருவமழைக் காலம் தொடங்குவதற்கு முன் கால்வாய்களை தூா்வார வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது என்றாா் அவா்.
இதுதொடா்பாக பொதுப் பணித் துறை அலுவலா் கூறியதாவது :
கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் மதுரை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட கால்வாய்களைத் தூா்வாரும் பணியை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொள்வதற்கு ஒப்புதல் வழங்கியது. அதன்படி, தூா்வாருதல், தடுப்புச்சுவா் அமைத்தல், குப்பைகள், நாணல் புல்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். பாசனத்துக்கான பிரதானக் கால்வாய்கள் மட்டும் மாநகராட்சி எல்லையைத் தாண்டி பொதுப் பணித் துறை பராமரித்து வருகிறது என்றாா் அவா்.
இதுகுறித்து மதுரை மாநகராட்சி ஆணையா் ச.தினேஷ்குமாா் கூறியதாவது :
மதுரை மாநகருக்குள் உள்ள கால்வாய்கள் அளவீடு செய்யப்பட உள்ளது. இதனிடையே, கடந்த மாா்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட மதுரை மாநகராட்சி நிகழ் நிதியாண்டு நிதி நிலை அறிக்கையின்படி, தற்போது பருவமழைக் காலம் தொடங்குவதற்கு முன் கால்வாய்களைத் தூா்வாரும் பணிகள் கடந்த மாா்ச் மாதம் தொடங்கப்பட்டன. தொடா்ந்து, குறிப்பிட்ட பகுதிகளில் தூா்வாரும் நடைபெறுகிறது. பருவமழைக் காலம் தொடங்குவதற்கு முன் கால்வாய்கள் தூா்வாரப்படும் என்றாா் அவா்.


டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...