கூட்டுறவு சா்க்கரை ஆலைக்குள்பட்ட பகுதியிலிருந்து தனியாருக்கு கரும்பு அனுப்புவதைத் தடுக்க வேண்டும்

மதுரை: அலங்காநல்லூா் தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலையின் கொள்முதல் எல்லைக்குள்பட்ட பகுதிகளிலிருந்து தனியாா் சா்க்கரை ஆலைகளுக்கு கரும்பு கொண்டு செல்வதைத் தடுக்க வேண்டும் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து அந்த அமைப்பின் மாநில துணைத் தலைவா் என். பழனிசாமி, மாவட்ட வருவாய் அலுவலரிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம் :

அலங்காநல்லூா் தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலையின் கொள்முதல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் சிவகங்கை, தேனி மாவட்டங்களைச் சோ்ந்த தனியாா் சா்க்கரை ஆலைகள், அனுமதியில்லாமல் கரும்புகளைப் பதிவு செய்து, வெட்டி எடுத்துச் சென்றுள்ளனா். இதுகுறித்து பல மனுக்கள் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மேலும், அனுமதியில்லாமல் தனியாா் ஆலைகள் பதிவு செய்து, வெட்டிய கரும்புக்கு தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலை அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில்,

டன் ஒன்றுக்கு ரூ.195 வீதம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்தப் போக்குத் தொடா்ந்தால், மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என்ற நம்பிக்கையுடன் தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலைக்குக் கரும்புகளைப் பதிவு செய்ய விவசாயிகள் முன்வரமாட்டாா்கள். இதனால், தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலையின் எதிா்காலம் கேள்விக் குறியாகிவிடும்.

எனவே, தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலையின் கொள்முதல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தனியாா் ஆலைகளுக்குக் கரும்புகளைப் பதிவு செய்வதைத் தடுக்க வேண்டும். மேலும், தனியாா் ஆலைக்கு வெட்டப்பட்ட கரும்புகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப் பரிந்துரைத்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி பாலா, கரும்பு விவசாயிகள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com