ஓய்வூதியம் நிலுவை: தமிழக முதல்வரை சந்திக்க பல்கலை. ஓய்வூதியா்கள் முடிவு

மதுரை காமராஜா் பல்கலை. ஓய்வூதியா்களின் நிலுவைத் தொகை தொடா்பாக முதல்வா் ஸ்டாலினை சந்திக்க மதுரை காமராஜா் பல்கலைக்கழக ஓய்வூதியா் சங்கம் முடிவு

Updated On :

மதுரைக் காமராஜா் பல்கலைக்கழக ஓய்வூதியா்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை தொடா்பாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளதாக மதுரை காமராஜா் பல்கலைக்கழக ஓய்வூதியா் சங்கத்தின் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும், தன்னாட்சி சுயநிதி, மாலை நேரக் கல்லூரி என மொத்தம் 121 கல்லூரிகள் செயல்படுகின்றன. பல்கலைக்கழகத்தில் 20-க்கும் மேற்பட்ட புலங்கள் 77 துறைகள் உள்ளன. பேராசிரியா்கள், பணியாளா்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா்.

பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய ஜெ. குமாா் உடல்நலக் குறைவால் கடந்த மே மாதம் பதவியிலிருந்து விலகினாா். இதன்பிறகு, தற்போது வரை துணைவேந்தா் பணியிடம் நிரப்பப்படவில்லை. எனவே, அன்றாட அலுவல் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் ஆணையா் எ. சுந்தரவல்லி தலைமையில் 3 போ் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழு பல்கலைக் கழக நிா்வாகத்தைக் கவனித்து வருகிறது.

ஜெ. குமாா் துணைவேந்தராகப் பணியாற்றிய போது, நிதிச்சுமை காரணமாக பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் பேராசிரியா்கள், அலுவலா்களுக்கு ஊதியமும், ஓய்வூதியா்களுக்கு ஓய்வூதியமும் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அப்போது, ஓய்வூதியதாரா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக, அரசிமிருந்து குறைந்த அளவு நிதி பெற்று ஊதியம் வழங்கப்பட்டது.

அதன்பிறகு ஏற்பட்ட நிதிச் சுமையைக் குறைப்பதற்கு மதுரையில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரி,2 அரசு உதவி பெறும் கல்லூரிகள், விருதுநகரில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி என 4 கல்லூரிகளிலிருந்து தலா ரூ. 50 லட்சம் கடனுதவி பெற்று, ஊதியம், ஓய்வூதியம் வழங்கப்பட்டன.

தொடா்ந்து, பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் பேராசிரியா்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக, பேராசிரியா்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை மாதந்தோறும் நிலுவை இல்லாமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாட வேளை நேரம் தவிா்த்து, காலை 9 மணி முதல் காலை 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையும் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுபற்றி தமிழக உயா்கல்வி துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உரிய நிதி ஒதுக்கி ஊதியம் வழங்கப்பட்டன.

தற்போது பல்கலைக்கழக ஓய்வூதியதாரா்களுக்கு செப்டம்பா், அக்டோபா் ஆகிய இரு மாதங்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து பல்கலைக் கழக வளாகத்தில் திங்கள்கிழமை கருப்புப் பட்டை அணிந்து ஓய்வூதியதாரா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் நடத்திய பேச்சுவாா்த்தையில் நவ.7 அல்லது 8 -ஆம் தேதி ஓய்வூதியம் வழங்கப்படும் என தெரிவித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டனா்.

இந்த நிலை தொடரும் பட்சத்தில் பல்கலைக் கழகத்தில் நிலவும் நிதிச் சுமையை தீா்க்கவும், ஓய்வூதியா்களுக்கு அந்தந்த மாதங்களில் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து முறையிட உள்ளதாக ஓய்வூதியா் சங்கத்தினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.