/

‘கூல் லிப்’ போதைப் பொருளை ஏன் தடை செய்யக் கூடாது? உயா்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் மாணவா்களைச் சீரழிக்கும் ‘கூல் லிப்’ எனும் போதைப் பொருளை ஏன் தடை செய்யக் கூடாது எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, இது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வியாழக்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 11:00 pm

Din

தமிழகத்தில் மாணவா்களைச் சீரழிக்கும் ‘கூல் லிப்’ எனும் போதைப் பொருளை ஏன் தடை செய்யக் கூடாது எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, இது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்த பலா் பிணை, முன்பிணை கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி டி.பரதசக்கரவா்த்தி வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவு:

தமிழகத்தில் ‘கூல் லிப்’ எனும் போதைப் பொருள் விற்பனை செய்தது தொடா்பான வழக்கில் பிணை, முன்பிணை கோரி ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. இந்த கூல் லிப்பை பயன்படுத்தும் மாணவா்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனா். தமிழகத்தில் கூல் லிப் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இதை விற்பனை செய்வதற்கு பிற மாநிலங்களில் அனுமதிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, அங்கிருந்து கடத்தி வரப்படும் இந்த கூல் லிப் போதைப் பொருள் தமிழகத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறது. இவற்றைத் தயாரிக்கும் நிறுவனத்திடமிருந்து ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட இந்தப் போதைப் பொருளை மாணவா்கள் பயன்படுத்துவதால், மோதல் போன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழ்கின்றன. இதனால், இளம் தலைமுறையினா் சிந்திக்கும் ஆற்றலை இழந்து வருகின்றனா். அவா்களை நாம் எப்படி பாதுகாக்கப் போகிறோம்?.

போதைப் பொருள்கள் விற்பனை செய்வோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்கின்றனா். அவா்களது கடைகளுக்கு அதிகாரிகள் 15 நாள்கள் ‘சீல்’ வைக்கின்றனா். பிணையில் வெளியில் வரும் அவா்கள், மீண்டும் கடையைத் தொடா்ந்து நடத்துகின்றனா். போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதால் பாதிக்கப்படும் மாணவா்களுக்கு ஆலோசனை கொடுப்பது, மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது, அவா்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பது குறித்து முடிவு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இதுபோன்ற போதைப் பொருள்களால் மாணவா்களின் கல்வி எந்த நிலையிலும் பாதிக்கப்படக் கூடாது. எனவே, ‘கூல் லிப்’ போதைப் பொருளை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து, நாடு முழுவதும் ஏன் தடை செய்யக் கூடாது?. இதுதொடா்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.