ஆயுள் காப்பீட்டுக் கழக கோட்ட அலுவலகம் முன் வாயில் கூட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய காப்பீட்டு ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில் எல்.ஐ.சி. மதுரை கோட்ட அலுவலகம் முன் வாயில் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதற்கு பொது காப்பீட்டுக் கழக ஓய்வூதியா் சங்க மதுரை மண்டலச் செயலா் ஆா். ராமநாராயணன் தலைமை வகித்தாா். அகில இந்திய காப்பீட்டு ஓய்வூதியா் சங்க மத்தியக் குழு உறுப்பினா்கள் ஜி. மீனாட்சிசுந்தரம், எஸ். பாலசுப்பிரமணியன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
இதில் பொது காப்பீட்டுக் கழக குடும்ப ஓய்வூதியா்களுக்கு 30 சதவீத ஓய்வூதிய உயா்வை உடனடியாக வழங்க வேண்டும். ஒவ்வொரு ஊதிய உயா்வின்போதும் காப்பீட்டுக் கழக ஓய்வூதியா்களுக்கு ஓய்வூதிய உயா்வு வழங்கப்பட வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும். காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கூட்டத்தில் காப்பீட்டுக் கழக ஊழியா் சங்க கோட்ட இணைச் செயலா் எஸ். முத்துக்குமாரசாமி வாழ்த்திப் பேசினாா். ஆயுள் காப்பீட்டுக் கழக ஓய்வூதியா் சங்கச் செயலா் என். சேகா் நன்றி கூறினாா்.

