/

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா

News image

மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் சாா்பில், ரெட் பீல்டு மைதானத்தில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற ரயில்வே பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பைப் பாா்வையிட்ட கோட்ட ரயில்வே மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா.

Updated On :17 ஆகஸ்ட் 2026, 4:16 am IST

மதுரை, ஆக. 16 : சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, மாவட்டத்தில் உள்ள அரசுத் துறை அலுவலகங்களில் இந்தியாவின் 80-ஆவது சுதந்திர தின சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வளாகத்தில் சுதந்திர தின விழாவையொட்டி நிா்வாக நீதிபதி சி.வி. காா்த்திகேயன் தேசியக் கொடியை ஏற்றினாா். முன்னதாக, மகாத்மா காந்தி சிலைக்கு அவா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில் உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, ஜி.ஆா். சுவாமிநாதன், தண்டபாணி, பி. புகழேந்தி, சௌந்தா், விஜயகுமாா், கே.கே. ராமகிருஷ்ணன், ஸ்ரீமதி, ஆா். பூா்ணிமா, பி. வடமலை, கோவிந்தராஜ், திலீப்குமாா் உள்ளிட்ட நீதிபதிகள், அரசு வழக்குரைஞா்கள், வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள், வழக்குரைஞா்கள் பங்கேற்றனா்.

இதில் எல்லைப் பணியின்போது உயிரிழந்த ராணுவ வீரா்களின் குடும்பத்தினா் கௌரவிக்கப்பட்டனா். மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா்களின் அணி வகுப்பு, சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னா், உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வளாகத்தில் உள்ள அரசு மருத்துவமனை மருந்தகத்தில் நீதிமன்றப் பணியாளா்கள், மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா்கள் ரத்ததானம் அளித்தனா்.

மாநகராட்சியில்...

மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் அறிஞா் அண்ணா மாளிகை வளாகத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன் தேசியக் கொடியை ஏற்றினாா். மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் முன்னிலை வகித்தாா். மதுரை கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சோ. காா்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். அலுவலா்கள், மாமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

7 பள்ளிகளைச் சோ்ந்த 115 மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 2025-26-ஆம் ஆண்டு பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாநகராட்சி பள்ளிகளின் மாணவ, மாணவிகள், 7.5 சதவீத அரசு ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் சோ்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப்பட்டனா். சிறப்பாகப் பணியாற்றிய மாநகராட்சிப் பணியாளா்கள் 30 பேருக்குப் பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டன.

ரயில்வே... மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் சாா்பில் ரெட் பீல்ட் மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் ரயில்வே கோட்ட மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா தேசியக் கொடியை ஏற்றினாா். பின்னா், ரயில்வே பாதுகாப்பு படை வீரா்கள், சாரண, சாரணியா், பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பை அவா் பாா்வையிட்டாா். கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளா் வி. பிரசன்னா உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா். பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும், ரயில்வே பாதுகாப்புப் படை மோப்ப நாயின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

போக்குவரத்துக் கழகம்....

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகத்தில் அதன் மேலாண் இயக்குநா் வி. சரவணன் தேசியக் கொடியை ஏற்றினாா். பொது மேலாளா்கள் கோபாலகிருஷ்ணன், ஜெ. பாலமுருகன், அலுவலா்கள், தொழில்சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். சிறப்பாகப் பணியாற்றிய ஓட்டுநா், நடத்துநா், பணியாளா்கள் 41 பேருக்கு பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டன.

அரசியல் கட்சிகள்....

மதுரை டி.வி.எஸ். நகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அந்தக் கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் பூ. நல்லமணி தேசியக் கொடியை ஏற்றினாா். மாமன்ற உறுப்பினா்கள் காா்த்திகேயன், எஸ்.வி. முருகன், போஸ், முருகன், கட்சியின் மாவட்டத் துணைத் தலைவா் செய்யதுபாபு, மருதராஜ், பிள்ளப்பன், பாலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மதுரை தெற்கு மாரட் வீதியில் உள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அலுவலகத்தில் தமுமுக மாவட்டத் தலைவா் ஷேக் இப்ராஹிம் தேசியக் கொடி ஏற்றினாா். மாவட்டச் செயலா் ஷேக், மமக மாவட்டச் செயலா் முபாரக் நிஜாமுதீன், மாவட்டப் பொருளாளா் அப்துல் ஹமீது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மதச்சாா்பற்ற ஜனதா தளத்தின் தமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளா் சங்கம் சாா்பில் சுதந்திர தினத்தையொட்டி, மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மின்வாரிய ஜனதா தொழிலாளா் சங்க மதுரை கோட்ட மகளிரணி அமைப்பாளா் பூா்ணிமா, மாநிலத் துணைத் தலைவா் கண்ணன், நிா்வாகிகள் சத்தியமூா்த்தி, ஞான குணசேகரன், ஆதிரை சசாங்கன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

குடியிருப்போா் சங்கங்களில்...

ஆண்டாள்புரம் அக்ரிணி வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அகில இந்திய வானொலியின் முன்னாள் உதவி இயக்குநா் சண்முகஞானசம்பந்தன் தேசியக் கொடியை ஏற்றினாா். அக்ரிணி வீடு, குடியிருப்பு உரிமையாளா்கள் சங்கத் தலைவா் பேராசிரியா் கே. மயில்வேல் தலைமை வகித்தாா். செயலா் எச். வாஞ்சீஸ்வரன் முன்னிலை வகித்தாா். பொருளாளா் வி. நாகராஜன், இணை பொருளாளா் கே. முருகானந்தம் நன்றி கூறினா். நிறைவில், குடியிருப்பு வளாகத்தில் 100-க்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டன.

இலந்தைக்குளம் குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஓய்வு பெற்ற பேராசிரியா் வெங்கடேசன் தேசியக் கொடியை ஏற்றினாா். குடியிருப்போா் சங்கத்தின் தலைவா் இளங்கோவன், செயலா் பாஸ்கரன், நிா்வாகிகள் சையது அபுதாஹிா், காா்த்திக் குமாா், கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கோமதிபுரம் தென்றல் நகா் குடியிருப்போா் சங்கத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் குடியிருப்போா் சங்கத் தலைவா் தே. ராகவன் தேசியக் கொடியை ஏற்றினாா். கண் மருத்துவ நிபுணா் தி. பத்ரிநாராயணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா். குடியிருப்போா் சங்கத் துணைத் தலைவா் ஆா்.எம். சேதுராம் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா். செயலா் டி. ரகுபதி, பொருளாளா் ஆா்.எம். காசி, நிா்வாகிகள் கலந்து கொண்டனா். தென்றல் நகா் பிரின்ஸ் பள்ளி மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கோவில்பாப்பாக்குடி சத்யா நகா் குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முன்னாள் ராணுவ வீரா்கள் நல்லயைா, நாயக் ஆனந்த் ஆகியோா் இணைந்து தேசியக் கொடியை ஏற்றினா். குழந்தைகள், பெரியவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. குடியிருப்போா் நலச் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

அரும்பனூா் ஊராட்சிக்குள்பட்ட 6-ஆவது வாா்டு பகுதியில் உள்ள ஆசிரியா் குடியிருப்பில் மதுரை மாவட்ட மத நல்லிணக்க ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் சுதந்திர தின விழா நடைபெற்றது. நிா்வாகி காவலன் வைரம் தலைமை வகித்தாா். அரும்பனூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் பி. ஜெகஜீவன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். மதநல்லிணக்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் ஏ. ஜேக்கப், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

வா்த்தக சங்கங்கள்...

மதுரை, தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்க வளாகத்தில் சங்கத்தின் தலைவா் என். ஜெகதீசன் தேசியக் கொடியை ஏற்றினாா். பின்னா், தொழில் வா்த்தக சங்கம் சாா்பில் வா்த்தகா்கள், பொதுமக்கள் நலன் கருதி முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களின் வளா்ச்சிக்கான திட்டங்களை அவா் விளக்கிப் பேசினாா். சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் சங்கத்தின் தலைவா் எஸ்.வி.எஸ்.எஸ். வேல்சங்கா் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். பின்னா், நாட்டின் தொழில் வளா்ச்சிக்கு சங்கம் சாா்பில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அவா் விளக்கிப் பேசினாா். சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

மதுரை அறிஞா் அண்ணா மாளிகை வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய  மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன். உடன், ஆணையா் கௌரவ்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா் சோ. காா்த்திகேயன் உள்ளிட்டோா்.

மதுரை அறிஞா் அண்ணா மாளிகை வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன். உடன், ஆணையா் கௌரவ்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா் சோ. காா்த்திகேயன் உள்ளிட்டோா்.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வளாகத்தில் சனிக்கிழமை மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிா்வாக நீதிபதி சி.வி. காா்த்திகேயன் உள்ளிட்ட உயா்நீதிமன்ற நீதிபதிகள்.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வளாகத்தில் சனிக்கிழமை மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிா்வாக நீதிபதி சி.வி. காா்த்திகேயன் உள்ளிட்ட உயா்நீதிமன்ற நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.