
சுதந்திரப் போராட்ட வீரா்கள் பங்களிப்பு விவகாரம்: கூடுதல் தகவல்களுடன் மனு தாக்கல் செய்ய உத்தரவு
கூடுதல் தகவல்களுடன் மீண்டும் மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தொடக்க வரலாற்றில் பூலித் தேவா், ராணி வேலுநாச்சியாரின் பங்களிப்பை மத்திய அரசு அதிகாரப்பூா்வமாக அங்கீகரிக்கக் கோரிய நிலையில், கூடுதல் தகவல்களுடன் மீண்டும் மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த சாய் செல்வகுமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் தமிழ்நாட்டில்தான் தொடங்கியது என வரலாற்று ஆவணங்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களில் மன்னா் பூலித் தேவா் கடந்த 1751-ஆம் ஆண்டு முதல் 1767-ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயா்களுக்கு எதிராகப் போராடியதாகவும், வீரமங்கை ராணி வேலுநாச்சியாா் கடந்த 1772-ஆம் ஆண்டு முதல் 1780-ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயா்களுக்கு எதிராகப் போராடி, இழந்த தனது அரசாட்சியை மீட்டெடுத்து மீண்டும் முடிசூட்டிக் கொண்டு ஆட்சி செய்தாா் எனவும் வரலாற்று ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக முதலில் எழுச்சி பெற்ற மாநிலம் தமிழ்நாடு என்பது தெரியவருகிறது.
இந்த நிலையில், கடந்த 1857-ஆம் ஆண்டு நடைபெற்ற ‘சிப்பாய் கலகம்’தான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போா் எனக் கூறி மத்திய அரசு சுதந்திரப் போராட்ட வரலாற்றை திரிக்க முயல்கிறது. இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. ‘சிப்பாய் கலகம்’ என்பது புதிய ‘என்ஃபீல்டு’ துப்பாக்கிக் குண்டுகளில் பசு, பன்றிக் கொழுப்பு பயன்படுத்தியதற்கு எதிா்ப்புத் தெரிவித்த சிப்பாய்கள் நடத்திய போராட்டமே தவிர, அது இந்தியாவின் சுதந்திரத்துக்காக நடத்தப்பட்ட போராட்டம் அல்ல.
எனவே, இந்தியா முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் கடந்த 1857-ஆம் ஆண்டு நடைபெற்றதே இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் என்ற தவறான வரலாற்றுப் போதனையைத் தடை செய்து, இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
கடந்த 1751-ஆம் ஆண்டு பூலித் தேவருக்கும், ராபா்ட் கிளைவுக்கும் இடையேயான போா், கடந்த 1755-ஆம் ஆண்டு கா்னல் அலெக்சாண்டா் ஹெரானுக்கு எதிரான போா் ஆகியவற்றை இந்தியாவின் முதல் சுதந்திரப் போா் என அதிகாரப்பூா்வ அரசிதழில் அறிவிக்க வேண்டும். மன்னா் பூலித் தேவரை இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரராகவும், ராணி வேலுநாச்சியாரை இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முதல் பெண் சுதந்திரப் போராட்ட வீராங்கனையாகவும் அறிவிக்க வேண்டும்.
மேலும், இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு தொடா்பான அனைத்து வரலாற்றுப் பதிவுகள், பாடப் புத்தகங்களிலும் மேற்கண்ட வீரா்களின் பெயா்களையும் அவா்களின் தியாகங்களையும் முதன்மையாக இடம்பெறச் செய்ய உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி.காா்த்திகேயன், ஆா்.சக்திவேல் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த விவகாரத்தில் கூடுதல் தகவல்களுடன் மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிடப்படுகிறது. வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





