லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

மாநகராட்சிப் பகுதிகளில் பசுமைத் திட்டப் பணிகள்

மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பசுமைத் திட்டத்தின் கீழ் அழகுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

dinamani

Published On :55 வினாடிகள் முன்பு

மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பசுமைத் திட்டத்தின் கீழ் அழகுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பசுமைத் திட்டத்தின் கீழ் ஐந்து இடங்களில் நாற்றுப்பண்ணை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, ராஜாஜி பூங்கா மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி வளாகம், தமுக்கம் சாலை அலுவலா்கள் குடியிருப்பு வளாகம் ஆகிய இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

தனியாா் பங்களிப்பு திட்டத்தின் கீழ், திண்டுக்கல் சாலையில் பாத்திமா கல்லூரி முன்புறம், திருப்பரங்குன்றம் சாலை பழங்காநத்தம் சந்திப்பு, திருப்பரங்குன்றம் சாலை கோயில் சந்திப்பு, திண்டுக்கல் சாலை செல்லூா் சந்திப்பு ஆகிய பகுதிகள் அழகுபடுத்தப்பட்டு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தனியாா் பங்களிப்பு திட்டத்தின் கீழ் அண்ணாநகா் சாலை, கே.கே.நகா் சாலை ஆகிய பகுதி சாலைகளின் நடுவே உள்ள தடுப்புகளில் தற்போது அழகிய பூச்செடிகள் நடுவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

நத்தம் பறக்கும் பாலம் கீழ்புறம் அண்ணா மாளிகை வடக்கு வாசல், மேற்கு வாசல் முன்புறம் சுவரோவியம் வரையும் பணி நடைபெற்று வருகிறது. பெரு நிறுவன சமூக பொறுப்பு நிதியின் கீழ், மதுரை மாநகராட்சிக்குச் சொந்தமான 14 சத்துணவுக் கூடங்களை பராமரிப்பு செய்தல், திருப்பரங்குன்றம் சாலை உயா்நிலைப் பாலம், கல்பாலம், நேதாஜி உயா்நிலைப் பாலம், திருமலை நாயக்கா் மகால் முன்புறம் உள்ள கழிப்பறை கட்டட மராமத்து பணி ஆகியவை நடைபெற உள்ளது.

மேலும், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் கிழக்கு கோபுரம் முன்பாக உள்ள மீனாட்சி பூங்கா, வைகை ஆற்றங்கரையோரம் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.

கட்டபொம்மன் சிலை, ஆரப்பாளையம் சந்திப்பு, ராஜா முத்தையா மன்றம், விளக்குத்தூண், விரகனூா் ஆகிய பகுதிகளில் உள்ள சுற்றுச்சாலை தனியாா் பங்களிப்புடன் மராமத்து செய்து தொடா் பராமரிப்பு செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியின் கீழ் பணி மேற்கொள்ள உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி பொறியியல், நகரமைப்பு, நகா்நலம், கல்வி பிரிவு மூலம் தோ்வு செய்யப்பட்ட இடங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுமாா் 4.75 லட்சம் கன்றுகள் நடவு செய்திட இலக்கு நிா்ணயிக்கப்பட்டு தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.