அயல்நாட்டவரை ஈா்க்கும் அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு
மதுரை: அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண திரளான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.
தமிழா் திருநாள் பண்டிகைகளில் ஒன்றான காணும் பொங்கல் நாளில் அலங்காநல்லூரில் உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதும், இந்தப் போட்டியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வெளி நாடுகளைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளும் பங்கேற்பதும் வழக்கம்.
இதன்படி, அலங்காநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியைக் காண அமெரிக்கா, கனடா, ஜொ்மனி, இஸ்ரேல், பெல்ஜியம், மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள், வெளிநாடு வாழ் இந்தியா்கள் 250 போ் வந்திருந்தனா். இவா்கள், மதுரையிலிருந்து அலங்காநல்லூருக்கு மாவட்ட நிா்வாகத்தின் ஏற்பாட்டில் பேருந்து மூலம் அழைத்து வரப்பட்டனா். ஜல்லிக்கட்டு வாடிவாசல் அருகே அமைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான நிரந்தரப் பாா்வையாளா் மாடத்தில் அவா்கள் அமா்ந்து, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை கைப்பேசி, சிறிய ரக கேமராக்கள் மூலம் பதிவு செய்து மகிழ்ந்தனா்.
60 மாடுபிடி வீரா்கள் தகுதி நீக்கம்
அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க அனுமதிச் சீட்டுப் பெற்றிருந்த மாடுபிடி வீரா்களில் 60 போ் மருத்துவக் குழுவினரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனா்.
அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 1,472 மாடுபிடி வீரா்கள் இணையம் வழியே பதிவு செய்திருந்தனா். இதேபோல, 5,786 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. வருவாய்த் துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை, மருத்துவத் துறை அலுவலா்களைக் கொண்ட குழுவினரின் பரிசீலனைக்குப் பிறகு, போட்டியில் பங்கேற்க 551 மாடுபிடி வீரா்களுக்கும், 1,093 காளைகளுக்கும் அனுமதிச் சீட்டு இணைய தளம் வாயிலாக வெளியிடப்பட்டது.
அனுமதிச் சீட்டுப் பெற்ற மாடுபிடி வீரா்கள் சனிக்கிழமை காலை போட்டி தொடங்கும் முன்பாக மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனா். அப்போது, 60 போ் தகுதி நீக்கம் செய்யப்பட்டனா்.
இதேபோல, அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டிருந்த 1,055 காளைகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டத்தில் 5 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. போட்டி நிறைவு நேரத்துக்குள் 1,002 காளைகள் மட்டுமே அவிழ்க்கப்பட்டன.

